
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 3-வது போட்டி இன்று(நவ.13) செஞ்சூரியனில் நடைபெறுகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது. இதனால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
முதல் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆனார். இந்திய அணியால் 20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து சொதப்பி வந்த இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து சதம் அடித்து தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
ஆனால், மற்றொரு ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பி வந்தாலும், அவருக்கு அணியில் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக சதம் அடித்த அபிஷேக் சர்மா வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் முறையே 7 மற்றும் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடந்த 7 இன்னிங்ஸ்களில் அபிஷேக் சர்மா 70 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், இந்திய அணியின் மற்றொரு வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 7 இன்னிங்ஸ்களில் 356 ரன்கள் குவித்திருக்கிறார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
அபிஷேக் சர்மாவின் மோசமான பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “அபிஷேக் சர்மாவுக்கான நேரம் முடிந்துவிட்டது. நீங்கள் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட நினைத்து விக்கெட்டை முதலிரண்டு ஓவர்களிலேயே பறிகொடுத்து விடுகிறீர்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு அது கைகொடுத்திருக்கலாம். ஆனால், இப்போது காலம் போய்விட்டது. பொறுமையாக விளையாடுவதற்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும். நேரம் போனால் திரும்பி வராது.
ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியது போன்று நீங்கள் விளையாட விரும்புகிறீர்கள். அதற்கு(ஐபிஎல்) முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடர் இருக்கிறது. ஆனால், அந்த அணியில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். ஒரு இடத்தை சஞ்சு எடுத்துவிட்டார். உங்கள் இடத்துக்கு கில் அல்லது ஜெய்வாலுக்கு சரியாக இருக்கும். உங்களுக்கு இனிவரும் ஆட்டங்கள் வாழ்வா? சாவா? போன்றே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.