
கோல்கர் மைதானத்தில் நடைபெற்றுவரும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெங்கால் அணிக்காக முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் போது காலில் காயமடைந்த முகமது ஷமிக்கு, லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
34 வயதான முகமது ஷமி 2018 ஆம் ஆண்டு கடைசியாக ரஞ்சி போட்டிகளில் விளையாடினார். அதன்பின்னர் தற்போது பெங்கால் அணிக்காக 19 ஓவர்கள் பந்துவீசிய அவர் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மத்திய பிரதேச வீரர்கள் சரண்ஷ் ஜெயின், குமார் கார்த்திகேயா, குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரஞ்சி போட்டிகளில் களமிறங்கிய முகமது ஷமியின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெங்கால் அணி 61 ரன்கள் முன்னிலை பெற்றது.
2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றதற்கு முன்னதாக, நவம்பரில் கேரளத்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி விளையாடினார். அந்த பார்டர் - கவாஸ்கர் தொடரில் முகமது ஷமி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரஞ்சிக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் முழு உடல் தகுதியை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறவுள்ளது. இதன்மூலம், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி விரைவில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.