சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.ஹெச்) அணியில் புதிய வரவாக இணைந்துள்ளார் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பல ஐபிஎல் சீசன்களில் தொடர்ச்சியாக விளையாடி வந்த இஷான் கிஷன், இன்று(நவ. 24) நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் ரூ. 11.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது அவரை ரூ. 15.25 கோடி தொகைக்கு எடுத்திருந்தது மும்பை அணி. அந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரும் இவரே. இந்த நிலையில், கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தைவிட ரூ. 4 கோடி குறைவான தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளார் இஷான் கிஷன்.
இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷன் பெயர் அறிவிக்கப்பட்டதும், அவருக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த அடிப்படைத் தொகையான ரூ. 2 கோடி கொடுத்து தங்கள் அணிக்காக எடுக்க மும்பை இந்தியன்ஸ் முற்பட்டது. எனினும், ஏலத் தொகை ரூ.3 கோடியை தொட்டதும், மும்பை அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ்(டிசி) அணி, தங்கள் அணியிலிருந்து விடுபட்டுள்ள இடக்கை ஆட்டக்காரரான ரிஷப் பந்த்க்கு மாற்றாக இஷான் கிஷனை எடுக்க முனைப்பு காட்டியது. அப்போது, இஷன் கிஷனை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ்(பிபிகேஎஸ்) அணிக்கும் டெல்லி அணிக்கும் கடும் போட்டி நிலவியது. ஆனால், இறுதிக்கட்டத்தில் அதிக தொகை கொடுக்க முன் வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இஷன் கிஷனை தங்கள் வசமாக்கிக் கொண்டது.