இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழக்கவும் தயாராக இருந்ததாக அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
மழை காரணமாக போட்டி இரண்டரை நாள்கள் நடைபெறாத சூழல் உருவானது. நான்காம் நாளில் வங்கதேச அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, அதிரடியாக விளையாடிய இந்திய அணி 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியைத் தொடர்ந்த இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
100 ரன்களுக்கு ஆட்டமிழக்க தயார்
மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்த இந்த போட்டியில் இந்திய அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழக்கவும் தயாராக இருந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மழையால் இரண்டரை நாள்களை இழந்த பிறகு, வங்கதேசத்தை முடிந்த அளவுக்கு வேகமாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என நினைத்தோம். அவர்களை ஆட்டமிழக்கச் செய்த பிறகு அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க நினைத்தோம். நாங்கள் 100-120 ரன்களுக்கு ஆட்டமிழக்கவும் தயாராக இருந்தோம். ஆகாஷ் தீப் சிறப்பாக செயல்பட்டார். அவர் அதிக அளவிலான ஓவர்களை வீசினார். நிறைய உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். நீண்ட நேரம் பந்துவீசும் திறன் அவருக்கு உள்ளது என்றார்.