
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 139 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றியைப் பதிவு செய்தது.
தென்னாப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் உள்ள சேக் சையத் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்ட்சன் மற்றும் டோனி டி ஜார்ஜி களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்த நிலையில் டோனி 12 ரன்களில் அவுட்டானார். அதன் பின்னர் ரன் வேகம் ஏறவேயில்லை. கேப்டன் பவுமா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின்னர் அணியில் இணைந்த வாண்டர் டஸன் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.
தென்னாப்பிரிக்க அணி 12.4 ஓவர்களில்3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து பரிதாபகரமான நிலையில் இருந்தது.
அதன் பின்னர் பொறுப்புடன் விளையாடிய விக்கெட் கீப்பட் ரியான் ரிகெல்ட்சன் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. ரியான் 91 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அடுத்து ஸ்டப்ஸும் 79 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
வியான் முல்டர் 11 ரன்களுடனும், பெலுக்வாயோ 1 ரன்னிலும், ஃபோர்டின் 28 ரன்களுடனும், லிசாட் 13 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். லுங்கி இன்கிடி 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடயர் 4 விக்கெட்டுகளும், யங் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதிகபட்சமாக ஜியார்ஜ் 21 ரன்களும், பால்பிர்னி, சாம்பர் ஆகிய இருவரும் தலா 20 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணித் தரப்பில் லிசாட் 4 விக்கெட்டும், இங்கிடி, ஃபோடின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.