
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி. டுமினி பீல்டிங்கில் ஈடுபட்டார்.
ஐக்கிய அமீரகத்தின் துபை சையத் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி.டுமினி தென்னாப்பிரிக்க அணி சார்பில் பீல்டிங் செய்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் உள்ள அதிகப்படியான வெப்பம், நீரிழப்பு மற்றும் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் வீரர்கள் வெளியேறியதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக ஜேபி.டுமினி களமிறங்கினார். மேலும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றாலும் சிலிப்பில் வந்த பந்தை தாவிப் பிடித்து அசத்தலாக பீல்டிங் செய்தார்.
கேப்டன் தெம்பா பவுமா முழங்கை காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஆல் ரவுண்டர் வியான் முல்டர் குடும்ப காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட டோனி ஜார்ஜியும் விளையாடவில்லை.
ஜேபி. டுமினி தென்னாப்பிரிக்க அணிக்காக 2004- 2019 காலகட்டங்களில் விளையாடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தென்னாப்பிரிக்க அணியின் முழுநேர பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் தென்னாப்பிரிக்க அணிக்காக 46 டெஸ்ட், 199 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. அதேவேளையில் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து ஒரு போட்டியிலும், தென்னாப்பிரிக்கா ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.