
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நவம்பர் 22 முதல் தொடங்குகிறது.
4-வது இடம்
ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு, ஸ்டீவ் ஸ்மித் சில போட்டிகளாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார். இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இதனையடுத்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 4-வது வீரராக களமிறங்குவார் என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட 6 மாதங்கள் ஆகும். அவர் 4-வது வீரராக களமிறங்கி விளையாடி வந்தார். ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து விலகி 4-வது வீரராக களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 4-வது வீரராக களமிறங்குவார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.