இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நேற்று (அக்டோபர் 24) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியா - 156/10
இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 16 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் தலா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி (1 ரன்), ரிஷப் பந்த் (18 ரன்கள்), சர்ஃபராஸ் கான் (11 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (38 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் சாண்ட்னர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிளன் பிளிப்ஸ் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: வார்னர் திரும்ப விளையாடுவாரா? கம்மின்ஸ் கூறியதென்ன?
301 ரன்கள் முன்னிலை
இந்திய அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். வில் யங் (23 ரன்கள்), டேரில் மிட்செல் (18 ரன்கள்), டெவான் கான்வே (17 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.
டாம் பிளண்டல் 30 ரன்களுடனும், கிளன் பிளிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 301 முன்னிலை பெற்று வலுவான் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.