இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான சூர்யகுமார் யாதவ் துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்றில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியபோது காயம் ஏற்பட்டதால், சூர்யகுமார் யாதவ் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
துலீப் கோப்பையில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் அனந்தபூரில் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளன. இந்த முதல் சுற்று போட்டியில் இந்தியா சி அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடுவதாக இருந்தது. தற்போது காயம் காரணமாக அவர் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இம்மாதம் விளையாடவுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.