ரஞ்சி தொடருக்கான தில்லி உத்தேச அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த்!

ரஞ்சி தொடருக்கான தில்லி உத்தேச அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
விராட் கோலி | ரிஷப் பந்த்
விராட் கோலி | ரிஷப் பந்த்
Published on
Updated on
1 min read

ரஞ்சி தொடருக்கான தில்லி உத்தேச அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ரஞ்சி கோப்பைக்கான தில்லி அணி உத்தேசப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்கள் 84 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் இருவரும் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் அவர்கள் ரஞ்சி அணியில் விளையாட வாய்ப்பில்லை என்று எதிர்பாக்கப்படுகிறது.

மேலும், இந்தப் பட்டியலில் இளம் வீரர்களான மயாங் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.

விராட் கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டு காஜியாபாத்தில் நடந்த உத்தரப்பிரதேசத்துக்கு எதிரானப் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடினார். அதன்பின்னர் அவர் விளையாடவில்லை. அதேபோல ரிஷப் பந்த் கரோனா தொற்றுக்கு முன்னர் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார்.

இதுகுறித்து தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அவர்கள் எங்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வீரர்கள். அவர்கள் விளையாட விரும்பினால் அவர்களின் பெயர்களை உத்தேசப் பட்டியலில் வைப்பது எங்கள் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

35 வயதான மூத்த கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதலாவது தில்லி பிரீமியர் லீக்கில் இஷாந்த் சர்மா விளையாடவில்லை. ஆனால், ஐபிஎல்லுக்கு முன்னதாக நடக்கவிருக்கும் சையத் முஸ்தாக் அலி டி20 போட்டியில் பங்கேற்பாரா என்பது சுவாரசியமாகவுள்ளது.

மக்களவை உறுப்பினர் பப்பு யாதவின் மகன் சர்தக் ரஞ்சனும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல்லில் 150 கிலோமீட்டருக்கும் மேல் பந்துவீசக்கூடிய மயாங் யாதவின் பக்கம் அனைவரின் பார்வையும் உள்ளது. அவர் வயிற்றில் ஏற்பட்ட தசைக்கிழிவு காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பாதியில் இருந்து விலகினார். விரைவில் இந்தியா ஏ அணிக்கு தேர்வு நடைபெறவுள்ளது. மயாங் யாதவ் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவரும் அணியில் இடம்பிடிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.