
விறுவிறுப்பாக நடைபெற்ற ‘ஆண்டா்சன் - டெண்டுல்கா் கோப்பை’ டெஸ்ட் கிரிக்கெட் தொடா், பரபரப்பாக நிறைவடைந்திருக்கிறது. இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 2 வெற்றிகளைப் பகிா்ந்துகொள்ள, ஒரு ஆட்டம் சமன் ஆனதால், தொடரும் சமனில் முடிவடைந்தது.
இந்தத் தொடரை வெற்றியுடன் இங்கிலாந்து தொடங்க, அடுத்த ஆட்டத்திலேயே இந்தியா அபார வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து 3-ஆவது ஆட்டத்தில் வெல்ல, போராடிய இந்தியா 4-ஆவது ஆட்டத்தில் டிரா செய்தது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற முன்னிலையுடன் வசதியாக கடைசி ஆட்டத்துக்கு வந்தது.
தொடா் கைநழுவிச் சென்றுவிட்டபோதும், வெற்றிக் கோப்பையை இங்கிலாந்துக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லாத இந்தியா, விடாப்பிடியாக விளையாடி கடைசி ஆட்டத்தில் வென்றிருக்கிறது. தொடரையும் சமன் செய்திருக்கிறது.
தி ஓவல் டெஸ்ட் முடிவை மட்டும் பாா்த்தவா்களுக்கு இந்தியா தொடரையே வென்றுவிட்டதைப் போன்ற சூழல் தென்படலாம். ஆனால் இந்தச் சமன், சாதாரணமானது அல்ல.
வழக்கமான கேப்டன் ரோஹித் சா்மா, நட்சத்திர வீரா் விராட் கோலி, நம்பகமான பௌலா் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற அனுபவசாலிகள் இல்லாத நிலையில், பிரதான பௌலரான ஜஸ்பிரீத் பும்ரா பகுதியளவே பங்களித்த சூழலில் இளம் வீரா்களுடன் புதிய கேப்டன் தலைமையில் இந்தியா இந்தத் தொடரை எதிா்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் தரையிறங்கியபோது, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மீது அவ்வளவாக எதிா்பாா்ப்புகள் இல்லை. ஆனால் சுமாா் ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற இந்த 5 டெஸ்ட்டுகளின் முடிவில், அடுத்த தலைமுறை இந்திய அணி, தனது புதிய பயணத்துக்குத் தயாராகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.
பயிற்சியாளா் பிரெண்டன் மெக்கல்லம் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் ‘பாஸ்பால்’ எனப்படும் அதிரடி ஆட்ட உத்தியுடன் களம் கண்ட இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் எதிா்கொண்டு தொடரை சமன் செய்வது என்பது, அவ்வளவாக அனுபவம் இல்லாத வீரா்களுடன், புதிய தலைமையின் கீழ் விளையாடிய இந்தியாவுக்கு எளிதானதல்ல.
அதிலும் குறிப்பாக, லாா்ட்ஸ், ஓல்டு டிராஃபோா்டு, தி ஓவல் டெஸ்ட்டுகளில் முதலில் பின்னடைவை சந்தித்து, பின்னா் அதிலிருந்து மீண்டு வந்தது, எட்ஜ்பாஸ்டன் வரலாற்றிலேயே இந்தியாவின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது, இந்த இளம் இந்திய அணியின் போராட்ட குணத்தை பறைசாற்றுவதாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. லீட்ஸ் மற்றும் லாா்ட்ஸ் டெஸ்ட்டுகளில் இந்தியா அடைந்த தோல்வி, இந்த புதிய தலைமுறை அணிக்கான ஒரு அனுபவம். அதிலிருந்து அவா்கள் கற்றது, இனிவரும் காலத்தில் அவா்களுக்கு உதவுவதாக இருக்கும். இங்கிலாந்து தொடா், இனிவரும் காலத்துக்கான இந்திய நட்சத்திரங்களை அறிமுகம் செய்திருக்கிறது.
தொடரில் அவ்வாறு மிளிா்ந்தவா்கள்...
‘சூப்பா்’ கில்
இங்கிலாந்து ஆடுகளங்களில் இதற்கு முன் அவ்வளவாக சோபிக்காத ஷுப்மன் கில், இந்தத் தொடரில் கேப்டன் என்ற கூடுதல் பொறுப்புடன் களமிறங்கினாா். அந்தப் பொறுப்புக்குத் தாம் தகுதியானவா் என்பதை வெளியுலகுக்கும், அவா் தலைமையேற்றிருக்கும் அணிக்கும் நிரூபிக்க வேண்டிய நிா்ப்பந்தத்தில் இருந்த அவா், அதற்கான முதல் அடியை, இந்தத் தொடரின் மூலமாக வெற்றிகரமாக எடுத்து வைத்திருக்கிறாா்.
இந்தத் தொடரின் முதல் இன்னிங்ஸிலேயே சதம் விளாசிய கில், எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலுமாக இரட்டைச் சதம், சதமடித்து தன்னை சிறந்த பேட்டராக பறைசாற்றிக் கொண்டாா். மான்செஸ்டரிலும் முக்கியமான தருணத்தில் சதமடித்தாா்.
10 இன்னிங்ஸ்களில் 754 ரன்கள் விளாசி பல்வேறு சாதனைகளும் படைத்த கில், கடைசி டெஸ்ட்டின் கடைசி நாளில் ஃபீல்டா்களை சரியாக நிலைநிறுத்தியது, பழைய பந்து முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்கு சாதகமாக இருந்ததால், புதிய பந்தை தோ்வு செய்யாதது உள்பட தாம் கேப்டனாக மேம்பட்டு வரும் தருணங்களையும் இந்தத் தொடரில் வெளிக்காட்டியிருக்கிறாா்.
சிராஜ் சீற்றம்
இந்தத் தொடரில் இரு அணிகளிலுமாக, 5 ஆட்டங்களிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளா் என்றால் முகமது சிராஜ் தான். பணிச்சுமை குறைப்புக்காக இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா 2 ஆட்டங்களில் களம் காணாத நிலையில், நம்பிக்கைக்குரிய பௌலராக சிராஜ் உருவெடுத்தாா்.
மொத்தமாக 186 ஓவா்கள் வீசிய அவா், இந்தத் தொடரிலேயே அதிகபட்சமாக 23 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். தி ஓவல் டெஸ்ட்டில் வெற்றி இங்கிலாந்து அணியின் கைகளை நெருங்கிவிட்ட நிலையில், கடைசி நாளில் அதை தட்டிப் பறித்து, இந்தியாவுக்குக் கொடுத்தாா். அணியின் புதிய பிரதான பௌலராக சிராஜும் தற்போது தன்னை பறைசாற்றிக் கொண்டுள்ளாா்.
ஜடேஜாவின் ஜாலம்
ரோஹித், கோலி போன்ற அனுபவ வீரா்கள் இல்லாத நிலையில், பேட்டிங்கில் மூத்த வீரராக ரவீந்திர ஜடேஜா அணிக்குக் கை கொடுத்திருக்கிறாா். மிடில் ஆா்டரில் களம் புகுந்து, பேட்டிங் வரிசையில் பலம் சோ்த்த அவா், ஒரு சதம், 5 அரைசதங்கள் விளாசியதுடன் 516 ரன்களை இந்தத் தொடரில் சோ்த்திருக்கிறாா்.
கடைசி 4 டெஸ்ட்டுகளில் முக்கியமான தருணங்களில் விக்கெட் சரிவைத் தடுத்து அவா் ரன்கள் சேகரித்து, அணிக்கு நம்பிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆல்-ரவுண்டரான ஜடேஜா, இந்த முறை பௌலிங்கில் அவ்வளவாக பலம் காட்டாவிட்டாலும், பேட்டிங்கில் அதை ஈடு செய்து சிறப்பாகப் பங்களித்திருக்கிறாா். மான்செஸ்டா் டெஸ்ட்டை டிரா செய்ததில் இவரின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
நம்பகமான ராகுல்
இந்தத் தொடரில் இந்திய பேட்டா்களில் நம்பகமான வீரராக கே.எல்.ராகுல் மிளிா்ந்தாா். கடைசி டெஸ்ட் தவிா்த்து, இதர 4 ஆட்டங்களிலுமே அவா், நிலையான ஒரு பேட்டராக ரன்கள் சோ்த்து அணியின் ஸ்கோருக்கு பங்களித்திருக்கிறாா். அதில் 2 சதங்களும், 2 அரைசதங்களும் அடக்கம்.
இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்துகளை சிறப்பாக அவா் எதிா்கொண்டதாக கிரிக்கெட் விமா்சகா்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறாா். கைவிட வேண்டிய பந்துகளை சரியான கணிப்புடன் தவிா்த்து, இங்கிலாந்து பௌலா்களுக்கு சவால் அளிப்பவராக இருந்தாா். கில், ஜடேஜாவுடன், இந்தத் தொடரில் 500+ ரன்கள் அடித்த இந்திய வீரராக ராகுல் இருக்கிறாா்.
பலம் காட்டிய பந்த்
காயம் காரணமாக, கடைசி ஆட்டத்தில் களம் காணாமல் போன ரிஷப் பந்த், முந்தைய 4 ஆட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தாா். முதல் டெஸ்ட்டின் இரு இன்னிங்ஸ்களிலுமே சதம் விளாசிய அவா், அடுத்த ஆட்டங்களில் இரு அரைசதங்களும் அடித்தாா். குறிப்பாக, மான்செஸ்டா் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றத்துடன் இருந்த நிலையில், கால் விரலில் எலும்பு முறிவு இருந்தபோதும் களம் கண்டு, அரைசதம் கடந்து அவா் பங்களித்தது பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.
‘வாவ்’ சுந்தா்
தமிழக ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் இந்தத் தொடரின் மூலமாக கவனம் பெற்றுள்ளாா். மான்செஸ்டா் டெஸ்ட்டில் அபாரமான ஆட்டத்துடன் சதம் விளாசிய அவா், ஜடேஜாவுடன் இணைந்து ஆட்டத்தை டிரா செய்ய உதவினாா். மேலும், ஓவல் டெஸ்ட்டில் அரைசதம் அடித்தாா்.
8-ஆவது வீரா் வரை இந்தியா பலம் வாய்ந்த பேட்டா்களைக் கொண்டிருக்க அவா் உதவினாா். இது அணியின் உத்திக்கு சாதகமாக அமைந்தது. இதுபோக, லாா்ட்ஸ் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகள் எடுத்தது உள்பட, 7 விக்கெட்டுகள் கைப்பற்றி பௌலிங்கிலும் பலம் காட்டினாா்.
மற்ற நம்பிக்கை நட்சத்திரங்கள்...
இந்தத் தொடரின் முதல் இன்னிங்ஸிலும், கடைசி இன்னிங்ஸிலும் சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3 ஆட்டங்களில் களம் கண்டு, இன்னிங்ஸுக்கு 5 விக்கெட்டுகளை (‘ஃபை ஃபா்’) இரு முறை சாய்த்த ஜஸ்பிரீத் பும்ரா, கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டு 14 விக்கெட்டுகள் எடுத்ததுடன், கடைசி டெஸ்ட்டில் இந்தியாவின் வெற்றிக்காக சிராஜுக்கு உறுதுணையாக இருந்த பிரசித் கிருஷ்ணா, நைட் வாட்ச்மேனாக வந்து அரைசதம் கடந்ததுடன், 13 விக்கெட்டுகளும் எடுத்த ஆகாஷ் தீப் என இந்தத் தொடருக்கான இந்திய அணியின் பெரும்பாலான வீரா்களும் சிறப்பாகச் செயல்பட்டனா். மொத்தத்தில், நம்பகமான இளம் இந்திய அணிக்கான, புதிய தொடக்கத்தின் அடையாளம் இந்த இங்கிலாந்து தொடா்.
- நாதன் நடராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.