
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் வரை வெற்றி வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் சமமாகவே இருந்தது. இருப்பினும், நான்காம் நாளில் ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட்டின் அசத்தலான சதங்களால் வெற்றி வாய்ப்பு இங்கிலாந்துக்கு அதிகமானது.
போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட, இங்கிலாந்து தொடரை கைப்பற்றப் போகிறது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், கடைசி நாளில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
மிகச் சிறந்த டெஸ்ட் தொடர்
போட்டியின் கடைசி நாளில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி தொடரை சமன்செய்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரே நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் என இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முகமது சிராஜ் கடைசி விக்கெட்டினை வீழ்த்தியவுடன் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம். முகமது சிராஜின் போராட்ட குணத்தை வியந்து பார்க்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் மிகுந்த சவாலானதாக இருந்துள்ளது. இதுவரை நான் பார்த்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலேயே இந்த டெஸ்ட் தொடர்தான் மிகச் சிறந்த டெஸ்ட் தொடர். இந்த 6 வாரங்கள் மிகுந்த சுவாரசியமானதாக இருந்தது. இரண்டு அணிகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டன. தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான முடிவு என்றே நினைக்கிறேன் என்றார்.
England head coach Brendon McCullum has spoken about the India-England Test series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.