ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா என்பது குறித்து...
chris woakes
கிறிஸ் வோக்ஸ்படம் | AP
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரை 2-2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது.

ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸுக்கு காயம் ஏற்பட்டது. பவுண்டரியை தடுக்க முயன்று அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்யவில்லை. இருப்பினும், அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் காயத்துடன் தைரியமாக களமிறங்கினார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா?

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் கிறிஸ் வோக்ஸ் ஆஷஸ் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஓவல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்துக்காக கிறிஸ் வோக்ஸுக்கு ஸ்கேன்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்தவுடன், அவரது தோள்பட்டை காயம் சரியாக இன்னும் எத்தனை வாரங்கள் தேவைப்படும் என்பது தெளிவாகத் தெரியவரும்.

இது தொடர்பாக பிபிசி ஸ்போர்ட்ஸில் கிறிஸ் வோக்ஸ் பேசியதாவது: எனக்கு காயம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதன் ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். ஆனால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தெரிவு அல்லது சரியான ஓய்வின் மூலம் சரிசெய்துகொள்ளும் தெரிவு என இரண்டு வழிகள் இருக்கின்றன. அறுவை சிகிச்சை செய்துகொண்டால், குணமடையும் காலம் அதிமாகும் என மருத்துவக் குழு தெரிவித்தது.

காயம் முழுமையாக குணமடைய மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் தேவைப்படும். அதனால், ஆஷஸ் தொடரில் விளையாடுவது கடினமாகிவிடும். சரிவர ஓய்வெடுத்தால் 8 வாரங்களில் குணமடைந்துவிடலாம் எனவும் கூறுகிறார்கள். அதனால், அதுவே சரியான தெரிவாக இருக்கும். இருப்பினும் என்னுடைய ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

There are doubts over whether England fast bowler Chris Woakes will play in the Ashes Test series against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com