
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் 2-2 என சமனில் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நவம்பர் 21 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. அது குறித்து நான் அதிகம் யோசித்துவிட்டேன். ஆனால், இங்கிலாந்தில் நான் நன்றாக பந்துவீசிய காலங்களும் இருக்கின்றன. சிறப்பாக செயல்பட முடியாத காலக்கட்டத்தைக் காட்டிலும், சிறப்பான பந்துவீச்சாளராக மாறியுள்ளேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன்.
இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடப் போகிறார்கள் என்பது தெரியும். ஆஸ்திரேலியாவில் ஆடுகளத்தின் தன்மை கடந்த சில ஆண்டுகளாக இருப்பதைப் போன்றே இருந்தால், நாங்கள் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்துவோம். கடந்த 2-3 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். ஆனால், எத்தனை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், அணிக்காக என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, சம்மரில் ஆஸ்திரேலிய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் இரண்டு போட்டிகளிலாவது விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்பினேன். ஆனால், எந்த ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு சம்மரில் ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனால், எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அதற்கு நான் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.