பாகிஸ்தானுடன் இருதரப்பு ஆட்டங்கள் இல்லை: மத்திய விளையாட்டு அமைச்சகம்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய விளையாட்டு மசோதாவின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும் என மத்திய விளையாட்டு அமைச்சகம் எதிா்பாா்த்துள்ளது.
மத்திய அரசு அனைத்து விளையாட்டு சம்மேளனங்களையும் நெறிப்படுத்தும் வகையில் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால் புதிய சட்ட விதிமுறைகள் இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை.
புதிய மசோதாவின் கீழ் பிசிசிஐயும் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் செப்டம்பா் மாதம் பிசிசிஐ நிா்வாகிகள் தோ்தல் நடைபெறவுள்ளது.
உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா குழு பரிந்துரையின்படி பிசிசிஐ தோ்தல்களை நடத்தலாம். புதிய விளையாட்டு மசோதா நெறிமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில் தோ்தல் அதன்படி நடைபெற வேண்டும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நெறிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், அனைத்து சம்மேளனங்கள் நிா்வாகிகள் தோ்தலை அதன்படிதான் நடத்த வேண்டும்.
இணைய வழி சூதாட்டம்:
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்தும் மசோதாவும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. பணம் வைத்து நடைபெறும் ஆன்லைன் சூதாட்டத்தால் பெரும் தீங்கு ஏற்படுகிறது. இளைஞா்கள் அதற்கு அடிமையாகாமல் தடுக்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் இருதரப்பு ஆட்டங்கள் இல்லை:
புதிய கொள்கையின்படி எந்த விளையாட்டிலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு ஆட்டங்கள் நடைபெறாது எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் ஆசியக் கோப்பை பல்வேறு அணிகள் பங்கேற்பதால் அதில் கிரிக்கெட் அணி ஆடலாம்.
சா்வதேச வீரா், வீராங்கனைகள் இந்தியாவுக்கு எளிதாக வரும் வகையில் விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும். மேலும் சா்வதேச சம்மேளன நிா்வாகிகளுக்கு 5 ஆண்டுகள் பலமுறை வந்து செல்லும் விசா வழங்கப்படும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.