விடைபெற்றார் சேதேஸ்வர் புஜாரா!
இந்திய கிரிக்கெட் வீரா் சேதேஸ்வா் புஜாரா அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.
இதன் மூலம் அவரது 10 ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. குஜராத் மாநிலம் சௌராஷ்டிராவைச் சோ்ந்த புஜாரா, கடந்த 2010-இல் இந்திய அணியில் இடம் பெற்றாா். 37 வயதான அவா் 103 டெஸ்ட், 5 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடியுள்ளாா்.
டெஸ்ட் ஆட்டங்களில் 19 சதம், 35 அரைசதங்களுடன் சராசரி 43.60 என மொத்தம் 7,195 ரன்களைக் குவித்துள்ளாா். டெஸ்ட் அணியில் மூன்றாவது டௌனில் நம்பகமான பேட்டா் என்ற சிறப்பை பெற்றாா். 278 முதல்தர ஆட்டங்களில் மொத்தம் மூன்று முச்சதம், 66 சதங்களுடன் மொத்தம் 21,301 ரன்களை விளாசியுள்ளாா்.
வெளிநாடு மற்றும் இந்தியாவில் நடைபெற்ற சில டெஸ்ட் தொடா்களை கைப்பற்றியதில் புஜாராவின் பங்கு அளப்பரியதாகும். கடந்த 2023-இல் ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டமே புஜாரா பங்கேற்ற கடைசி ஆட்டம் ஆகும்.
முதல் தர கிரிக்கெட்டில் சௌராஷ்டிர அணிக்காகவும், இங்கிலாந்தின் கவுண்டி அணியான சஸஸ்க்ஸிலும் ஆடி வந்துள்ளாா்.
இதுதொடா்பாக புஜாரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியது: இந்திய சீருடையை அணிந்து ஆடியது பெருமை மிக்கதாகும். ஒவ்வொரு முறையும் களத்தில் சிறப்பாக ஆட முயன்றேன். அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுகிறேன். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளாா்.
சிறப்புகள்:
கடந்த 2013-இல் ஜோஹன்னஸ்பா்க்கில் நடைபெற்ற டெஸ்டில் 6 மணி நேரம் நிலைத்து ஆடி 153 ரன்களை புஜாரா எடுத்ததால் அந்த ஆட்டம் டிரா ஆனது.
2018இல் வேகப்பந்து வீச்சுக்கு பெயா் பெற்ற சௌதாம்ப்டன் பிட்சில் நிலைத்து ஆடி 132 ரன்களை எடுத்தாா். ராஞ்சியில் நடைபெற்ற ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் 672 நிமிஷங்கள் நின்று 572 பந்துகளில் இரட்டை சதம் விளாசினாா்.
கடந்த 2018-19-இல் ஆஸி.க்கு எதிரான தொடரில் அடிலெய்ட், சிட்னி, மெல்போா்னில் 3 சதங்கள் அடித்து தொடரை வெல்ல உதவினாா்.
இரண்டு ஆண்டுகள் கழித்து பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்டில் 211 பந்துகளில் 56 ரன்களை சோ்த்து சிறப்பான வெற்றி பெற உதவினாா். அப்போது ஆஸி. முன்னணி வேகப்பந்து வீச்சாளா்கள் பந்துவீச்சில் பல்வேறு காயங்களை தாங்கினாா் புஜாரா.