

விராட் கோலியின் எதிர்காலம் குறித்து நாம் ஏன் பேச வேண்டுமென இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று (நவம்பர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா அரைசதம் கடந்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 120 பந்துகளில் 135 ரன்கள் (11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், விராட் கோலியின் எதிர்காலம் குறித்து நாம் ஏன் பேச வேண்டுமென இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி இந்திய அணியில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு விளையாடுவார் என்ற விவாதம் எப்போதும் ஏன் இருந்துகொண்டே இருக்கிறது என்பது எனக்கு உண்மையில் புரியவில்லை. விராட் கோலி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். அவரது எதிர்காலம் குறித்து தற்போது நாம் பேசுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது. அவர் விளையாடும் விதம், அவரது உடல் தகுதி போன்றவற்றில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் வரையில், மற்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் பேசுவதற்கு அவசியமே இல்லை.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் அற்புதமாக விளையாடி வருகிறார்கள். அணியில் உள்ள வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது, நாங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆலோசிப்பதில்லை. பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்துவோம். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடர் தொடர்பாக எந்த ஒரு சிறிய ஆலோசனை கூட எங்களுக்குள் மேற்கொண்டதாக நினைக்கவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.