ராய்பூரில் இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், ராய்பூரில் புதன்கிழமை (டிச. 3) நடைபெறுகிறது.
ராய்பூரில் இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
Updated on
2 min read

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், ராய்பூரில் புதன்கிழமை (டிச. 3) நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று 3 ஆட்டங்கள் கொண்ட தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று, தொடரில் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியுடன் வருகிறது.

ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், விராட் கோலியின் அபாரமான சாதனைச் சதம், ரோஹித் சர்மாவின் அதிரடி அரைசதம், கேப்டன் கே.எல்.ராகுலின் நிதானம் என பேட்டிங்கில் பலம் காட்டியதன் அடிப்படையில் இந்தியா வெற்றி பெற்றது.

2027 உலகக் கோப்பை போட்டியில் ரோஹித், கோலி ஆகியோருக்கான இடங்களுக்கு விவாதங்கள் உள்ளன. இருவருக்குமான வாய்ப்பை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமைப் பயிற்சியாளர் கெüதம் கம்பீர் ஆகியோர் உறுதி செய்யாத நிலையில், அந்தப் போட்டியில் தங்களை தவிர்க்க முடியாதவர்களாக மாற்றும் ஒரே நோக்கத்துடன் ரோஹித், கோலி விளையாடி வருகின்றனர்.

இந்திய பிளேயிங் லெவனை வரிசைப்படுத்துவதில் தடுமாற்றம் தொடர்கிறது. லிஸ்ட் "ஏ' கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட், 4-ஆவது இடத்தில் பொருந்துவதற்குத் திணறுகிறார். கே.எல்.ராகுலும் 6-ஆவது இடத்தில் இதே விதியை சந்திக்க, ஆல்-ரவுண்டர் வாஷிடன் சுந்தர் நிலையில்லாமல் மாற்றத்துக்கு உள்ளாகிறார்.

டெஸ்ட்டை தொடர்ந்து, இந்தத் தொடரிலும் இன்னும் சோபிக்காத ஜெய்ஸ்வால், தனது வழக்கமான ஆட்டத்தை மீட்டெடுத்தால் அணிக்கு பலம் சேரும். பந்துவீச்சை பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் இந்திய பெளலர்கள் தென்னாப்பிரிக்க பேட்டர்களை தட்டுத்தடுமாறியே கட்டுப்படுத்தினர்.

நியூ பால் கொண்டு அபாரமாகத் தொடங்கிய ஹர்ஷித் ராணா, 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய குல்தீப் யாதவ் என இருவருமே ரன்கள் கொடுத்தது சற்று பின்னடைவாக அமைந்தது. அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணாவுடன், ஆல்-ரவுண்டரும் பெüலிங்கில் கைகொடுக்கும் நிலையில், தென்னாப்பிரிக்க பேட்டர்களை கட்டுப்படுத்த இயலும்.

மறுபுறம் தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, ராஞ்சி ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியை தட்டிப் பறிக்க முனைந்த மேத்யூ பிரீட்ஸ்கி, மார்கோ யான்சென், கார்பின் பாஷ் ஆகியோர் இந்த ஆட்டத்திலும் பலம் சேர்க்கின்றனர்.

முதல் ஆட்டத்தில் சோபிக்காத டாப் ஆர்டர் பேட்டர்களான, எய்டன் மார்க்ரம், ரயான் ரிக்கெல்டன், குவின்டன் டி காக் ஆகியோர், இந்த ஆட்டத்தில் மீண்டு வர முயற்சிப்பார்கள். டோனி டி ஜோர்ஸி, டெவால்ட் பிரெவிஸ் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கின்றனர்.

பெüலிங்கில் யான்சென், சுப்ராயன், பர்கர், பார்ட்மேன், பாஷ் என விக்கெட்டுகள் சரிப்போர் வரிசையாக இருக்கின்றனர்.

உத்தேச லெவன்

இந்தியா

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட்/திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல் (வி.கீ., கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

தென்னாப்பிரிக்கா

எய்டன் மார்க்ரம், ரயான் ரிக்கெல்டன்/டெம்பா பவுமா, குவின்டன் டி காக், மேத்யூ பிரீட்ஸ்கி, டோனி டி ஜோர்ஸி, டெவால்ட் பிரெவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், பிரெனாலென் சுப்ராயென்/ கேசவ் மஹராஜ், நாண்ட்ரே பர்கர், ஆட்னீல் பார்ட்மேன்.

நேரம்:

நண்பகல் 1.30 மணி

நேரலை:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com