

ஆஷஸ் தொடரில் காபா டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளும் மோதிய பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி இரண்டு நாள்களிலேயே முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், இந்த இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி பகலிரவு போட்டியாக பிரிஸ்பேனின் காபா கிரிக்கெட் திடலில் நாளை மறுநாள்(டிச.4) தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பகலிரவு போட்டிக்கே உரித்தான இளஞ்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்படும்.
இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் விளையாடிய மார்க் வுட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடிவரும் வில் ஜாக்ஸுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இங்கிலாந்து அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் 22 வயதான ஷோயிப் பஷீர், 19 போட்டிகளில் விளையாடி சிறப்பான ஆட்டத்தால் 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.