

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 20-வது முறையாக இந்திய அணி டாஸ்ஸில் தோற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ராஞ்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
தொடரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்று (டிச.3) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வீர் நாராயணன் சிங் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றதும் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுலின் முகத்தில் விரக்தியைக் காண முடிந்தது. இந்தப் போட்டியில் டாஸ்ஸில் தோற்றதன் மூலம், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 20 வது முறையாக டாஸ்ஸை தோற்றுள்ளது.
டாஸ்ஸில் தோற்றது குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரவி சாஸ்திரியிடம் இந்திய கேப்டன் கே.எல். ராகுல் பேசுகையில், “இன்றையப் போட்டியில் மிகப் பெரிய அழுத்தம் டாஸ் என்றுதான் நினைக்கிறேன். நீண்ட காலமாகவே நாங்கள் டாஸ்ஸை வெல்லவில்லை. அதனால்தான், நாணயத்தை சுண்டி பயிற்சி செய்து வருகிறேன். ஆனால், அது இன்னும் பலனளிக்கவில்லை” என்றார்.
இந்திய அணி கடைசியாக 2023 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றிருந்தார்.
அதன்பின்னர், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், கே.எல். ராகுல் உள்ளிட்டோர் 2 ஆண்டுகளில் இந்திய அணியை வழிநடத்திய 20 போட்டிகளில் ஒரு போட்டியில்கூட டாஸ் வெல்லவில்லை.
இது நிகழ்த்தகவின் அடிப்படையில், 10,48,576-ல் ஒருமுறை மட்டுமே (இதற்கான வாய்ப்பு 0.000095 சதவிகிதம்). டாஸ்ஸை தோற்றிருந்தாலும், கடந்த 19 போட்டிகளில் இந்திய அணி 69 சதவிகித போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.