

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு ஹார்திக் பாண்டியா மற்றும் ஷுப்மன் கில் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாளை முதல் டி20 தொடர் தொடங்குகிறது.
ஆசிய கோப்பைத் தொடரின்போது காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் நீண்ட நாள்களாக இடம்பெறாமலிருந்து ஹார்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். கழுத்து வலியின் காரணமாக இரண்டாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய ஷுப்மன் கில்லும் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு ஹார்திக் பாண்டியா மற்றும் ஷுப்மன் கில் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் தற்போது முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா புதிய பந்தில் பந்துவீச்சில் ஈடுபடும்போது, இந்திய அணிக்கு நிறைய தெரிவுகள் கிடைத்ததை நீங்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பார்த்திருப்பீர்கள். அவர் புதிய பந்தில் பந்துவீசும்போது, பிளேயிங் லெவனை தேர்வு செய்ய அணி நிர்வாகத்துக்கு பெரிய அளவில் சிரமம் இருப்பதில்லை.
பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியாக இருப்பது அணிக்கு சமபலத்தை கொடுக்கிறது. ஐசிசி உள்பட அனைத்து பெரிய தொடர்களிலும் ஹார்திக் பாண்டியாவின் அனுபவம் அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. மிகப் பெரிய போட்டிகளில் ஹார்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது அனுபவம் அணிக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.