

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இரட்டை சாதனை படைக்கவுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்திய அணியும் வென்றன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (டிசம்பர் 9) தொடங்குகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது காயம் ஏற்பட்டதால் ஹார்திக் பாண்டியா நீண்ட நாள்களாக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்தார். காயத்திலிருந்து மீண்டுள்ள ஹார்திக் பாண்டியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளார்.
இரட்டை சாதனையை நோக்கி...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா இரட்டை சாதனை படைக்கவுள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 120 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்திக் பாண்டியா 1860 ரன்கள் மற்றும் 98 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 5 அரைசதங்கள் அடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹார்திக் பாண்டியா, 140 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவரைச் சேரும்.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஹார்திக் பாண்டியா அண்மையில் சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஃபார்முக்குத் திரும்புவார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.