

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதுவென்ற ஹார்திக் பாண்டியாவின் பேட்டி உத்வேகத்தை அளிக்கும் விதமாக இருக்கிறது.
அவர் அளித்த பேட்டியில், “காயத்திலிருந்து திரும்ப வரும்போது வலுவாக பெரியதாக வரவேண்டும் என நினைத்திருந்தேன்” எனக் கூறினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 தொடரில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கில் அதிரடியாக 28 பந்துகள் 59 ரன்களும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்து அசத்தினார்.
இந்தச் சிறப்பான செயல்பாட்டுக்கு அவருக்கு ஆட்ட நாயகன் விருது தரப்பட்டது. 32 வயதாகும் பாண்டியா ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விலகினார்.
முன்னதாக இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் காயம் காரணமாக மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
காயம் நமது மனதிடத்தை அதிகமாக சோதிக்கும்...
போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா பேசியதாக பிசிசிஐ விடியோவில் இருப்பதாவது:
காயத்திலிருந்து திரும்ப வரும்போது வலுவாக பெரியதாக வரவேண்டும் என நினைத்திருந்தேன்.
காயம் நமது மனதிடத்தை அதிகமாக சோதிக்கும். சில நேரங்களில் அது நமக்கு சந்தேகங்களையும் உருவாக்கும். என்னை நேசிப்பவர்களுக்குதான் இந்தப் பாராட்டுகள் செல்ல வேண்டும்.
நான் பலமாக இருந்தேன். நான் பல விஷயங்களை நன்றாகச் செய்தேன். அதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. எனது திறமையை நம்பினேன்.
நாமே நம்மை நம்பாவிட்டால், வேறு யார் நம்மை நம்புவார்கள்...
ஒரு வீரராக எனது திறமையை நான் மிகவும் நம்புகிறேன். நான் எப்போதுமே ‘நாமே நம்மை நம்பாவிட்டால், வேறு யார் நம்மை நம்புவார்கள்’ என்பதை நம்புகிறவன்.
நான் மிகவும் நேர்மையான மனிதன். வாழ்க்கையிலும் எதார்த்தமாகவே இருக்க விரும்புகிறேன். அது எனக்கு மிகவும் உதவி இருக்கிறது.
என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் உண்மையை மறைத்து, இனிமையாகப் பேசுவது என்பது கிடையாது.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி நான் எதுவும் நினைப்பதில்லை. நான் என் மனதில் எப்படி உணர்கிறேன் என்பது மட்டுமே முக்கியம்.
நீங்கள் ராக்ஸ்டாராக இருக்க வேண்டும்...
தற்போதைக்கு, ஒவ்வொரு நொடியும் களத்தில் ஹார்திக் எப்படி விளையாட்டை ரசித்து விளையாடுகிறான் என்பது மட்டுமே முக்கியம்.
இன்னும் சிறப்பாக பெரியதாக செய்ய வேண்டும் என்பதே என் வாழ்க்கையின் இலக்காக இருக்கிறது.
நீங்கள் ராக்ஸ்டாராக இருக்க வேண்டும். நீங்கள் 10 நிமிஷங்கள் வந்து விளையாடினாலும் கூட்டம் ஆர்பரிக்கிறதெனில், அதுதான் எனக்கு உத்வேகம் ஊட்டுகிறது.
வாழ்க்கை எனக்கு பல கடினமான சவால்களை (எலுமிச்சைகளை) அளித்துள்ளன. அவைகளை, எப்போதுமே எலுமிச்சைச் சாறாக மாற்றவே நினைப்பேன்.
நான் எப்போது வந்தாலும், கூட்டம் எனக்காக காத்திருப்பதாகவே உணர்கிறேன். எனது பேட்டிங்கைப் பார்க்கவே அவர்கள் வருவதாக நினைக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.