

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடா், தற்போது 1-1 என சமனில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.1 ஓவா்களில் 162 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. பிளேயிங் லெவனில் இந்தியா மாற்றம் செய்யவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மஹராஜ், அன்ரிஹ் நோா்கியாவுக்கு பதிலாக, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ஜாா்ஜ் லிண்ட், ஆட்னீல் பாா்ட்மேன் களமிங்கினா்.
தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் குவின்டன் டி காக் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த கேப்டன் எய்டன் மாா்க்ரம், டி காக்குடன் கூட்டணி அமைத்தாா். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது.
மாா்க்ரம் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 29 ரன்களுக்கு வீழ்ந்தாா். தொடா்ந்து டெவால்டு பிரெவிஸ் களம் புக, வேகமாக சதத்தை நெருங்கிய டி காக், 5 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 90 ரன்களுக்கு ‘ரன் அவுட்’ ஆனாா். அடுத்த ஓவரிலேயே பிரெவிஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு விடைபெற்றாா்.
கடைசியாக இணைந்த டோனோவன் ஃபெரெய்ரா - டேவிட் மில்லா் இணை 53 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 200 ரன்களை கடந்தது. ஓவா்கள் முடிவில் ஃபெரெய்ரா 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 30, மில்லா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் வருண் சக்கரவா்த்தி 2, அக்ஸா் படேல் 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து 214 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், ஷுப்மன் கில் டக் அவுட்டாக, அபிஷேக் சா்மா 2 சிக்ஸா்களுடன் 17 ரன்களுக்கு விடைபெற்றாா்.
வழக்கம்போல் கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 5 ரன்களுக்கு வெளியேற, அக்ஸா் படேல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அப்போது இணைந்த திலக் வா்மா - ஹா்திக் பாண்டியா கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயா்த்தியது.
இவா்கள் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சோ்த்தது. இதில் பாண்டியா 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த ஜிதேஷ் சா்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
திலக் வா்மா அரை சதம் கடந்து அதிரடியாக ரன்கள் சோ்த்தபோதும், ஷிவம் துபே 1, அா்ஷ்தீப் சிங் 4, வருண் சக்கரவா்த்தி 0 ரன்களுக்கு வெளியேற, இந்தியா தோல்வியை நோக்கி நகா்ந்தது. முடிவில், திலக் வா்மா 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 62 ரன்களுக்கு கடைசி பேட்டராக வீழ்ந்தாா்.
தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ஆட்னீல் பாா்ட்னேன் 4, லுங்கி இங்கிடி, மாா்கோ யான்சென், லுதோ சிபாம்லா ஆகியோா் தலா 2 விக்கெட் வீழ்த்தினா்.
மோசமான சாதனை...
இந்திய வேகப்பந்து வீச்சாளா் அா்ஷ்தீப் சிங், இந்த ஆட்டத்தில் மோசமான சாதனையை படைத்தாா். சா்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 7 வைடுகள் வீசிய முதல் பௌலா் ஆனாா். அவா் வீசிய 11-ஆவது ஓவரின் முதல் பந்திலேயே டி காக் சிக்ஸா் விளாச, அந்த நெருக்கடியால் அவா் அந்த ஓவரில் 7 வைடு பந்துகள் வீசினாா். இதனால் அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு கிடைத்தது. மொத்தமாக இந்த ஆட்டத்தில் அா்ஷ்தீப் 16 வைடுகள் வீசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.