

இரண்டு போட்டிகளில் விளையாடியதை வைத்து ஷுப்மன் கில்லின் பேட்டிங்கை மதிப்பிடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பேசியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், சண்டீகரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் டி20 தொடரும் 1-1 என சமனில் உள்ளது.
இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்த இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில், நேற்றையப் போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் ஷுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் மீது விமர்சனங்கள் எழுந்தன. டி20 உலகக் கோப்பைத் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஷுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் எனவும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், டி20 வடிவிலான கிரிக்கெட்டில் வெறும் இரண்டு ஆட்டங்களில் ஷுப்மன் கில்லின் பேட்டிங்கை குறைவாக மதிப்பிடுவது நியாயமாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடருக்கு மூன்று மாதங்கள் இருப்பதை மறந்துவிடுங்கள். ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தாலும் ஷுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் எனக்கு கவலையளிக்காது. ஏனெனில், நாம் டி20 வடிவிலான கிரிக்கெட் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது.
கிரிக்கெட் வீரர்களை விமர்சிப்பதில் இந்தியாவில் உள்ள அடிப்படை பிரச்னை என்னவென்றால், வெறும் ஒன்றிரண்டு போட்டிகளில் எடுத்த ரன்களின் எண்களை மட்டுமே வைத்து வீரரின் திறன் குறித்து அவர்கள் முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அவசரமாக முடிவுகளை எடுப்பதே நம்முடைய பிரச்னை. ஐபிஎல் போட்டிகளாகட்டும் அல்லது சர்வதேச டி20 போட்டிகளாகட்டும் ஷுப்மன் கில் போன்ற வீரர் ஒருவர் வெறும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடும் விதத்தினை வைத்து நாம் அவர்களது பேட்டிங் குறித்து முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஒன்றிரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததை வைத்து முடிவுக்கு வந்துவிட்டால், அது நிலைமையை மிகவும் கடினமாக்கிவிடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.