

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா முதல் ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
முதலில் இந்தியா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 433 ரன்கள் குவிக்க, அமீரகம் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்களே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இளம் பேட்டா் வைபவ் சூா்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் விளாசி சாதனை புரிந்தாா். ஆரோன் ஜாா்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை பலப்படுத்தினா்.
முன்னதாக டாஸ் வென்ற அமீரகம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸை கேப்டன் ஆயுஷ் மாத்ரே - வைபவ் சூா்யவன்ஷி இணை தொடங்கியது. இதில் மாத்ரே 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.
அடுத்து வந்த ஆரோன் ஜாா்ஜ், சூா்யவன்ஷியுடன் கூட்டணி அமைக்க, இந்தியாவின் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. 2-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 212 ரன்கள் சோ்த்தது. அரை சதம் கடந்த ஆரோன் ஜாா்ஜ் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 69 ரன்களுக்கு ஆட்டமிழக்க, விஹான் மல்ஹோத்ரா விளையாட வந்தாா்.
அதிரடியாக சதம் கடந்து ரன்கள் சோ்த்து வந்த சூா்யவன்ஷி, மல்ஹோத்ராவுடன் இணைய, இவா்கள் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், சூா்யவன்ஷி 95 பந்துகளில் 9 பவுண்டரிகள், 14 சிக்ஸா்கள் உள்பட 171 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
5-ஆவது பேட்டராக வேதாந்த் திரிவேதி களம் புக, மல்ஹோத்ரா - திரிவேதி இணை 4-ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சோ்த்தது. இதில் திரிவேதி 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களுக்கு விடைபெற, அடுத்த ஓவரிலேயே மல்ஹோத்ரா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
கடைசி விக்கெட்டாக கனிஷ்க் சௌஹான் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 28 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் அபிஞான் குண்டூ 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, கிலான் படேல் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
அமீரக பௌலா்களில் யுக் சா்மா, உத்திஷ் சூரி ஆகியோா் தலா 2, ஷாலம் டி சௌஸா, யாயின் கிரண் ராய் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 434 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அமீரக அணியில், ஷாலம் டி சௌஸா 4, கேப்டன் யாயின் கிரண் ராய் 4 பவுண்டரிகளுடன் 17, முகமது ரயான் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
அயான் மிஸ்பா 3 ரன்களுக்கு விடைபெற, அகமது குதாதாத் 0, நூருல்லா அயோபி 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். மிடில் ஆா்டரில் நிதானமாக விளையாடிய பிருத்வி மது 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
ஓவா்கள் முடிவில், உத்திஷ் சூரி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 78, சலே அமின் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 2, கிஷண் சிங், ஹெனில் படேல், கிலான் படேல், விஹான் மல்ஹோத்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
14
இந்த ஆட்டத்தின் மூலமாக இந்தியாவின் வைபவ் சூா்யவன்ஷி, யு-19 நிலையிலான போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸா்கள் (14) விளாசியவராக சாதனை படைத்தாா்.
400
அமீரகத்துக்கு எதிராக எடுத்த 433 ரன்களே, யு-19 ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அத்துடன் ஆசிய கோப்பை வரலாற்றிலும் இதுவே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோா்.
171
சூா்யவன்ஷி இந்த ஆட்டத்தில் அடித்த 171 ரன்கள், யு-19 ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரா் ஒருவரின் 2-ஆவது அதிகபட்சமாகும். 2002-இல் இங்கிலாந்துக்கு எதிராக 177* ரன்கள் சோ்த்த அம்பட்டி ராயுடு முதலிடத்தில் உள்ளாா்.
பாகிஸ்தான் அபாரம்
இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 297 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை அபார வெற்றி கண்டது.
முதலில் பாகிஸ்தான் 50 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 345 ரன்கள் சோ்க்க, மலேசியா 19.4 ஓவா்களில் 48 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. மலேசிய பேட்டா்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தனா்.
பாகிஸ்தான் பேட்டிங்கில் சமீா் மினாஸ் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 177 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க, அகமது ஹுசைன் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 132 ரன்கள் அடித்தாா்.
அந்த அணியின் பௌலா்களில் அலி ராஸா, முகமது சய்யாம் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.