ஆசிய கோப்பை யு-19: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆசிய கோப்பைக்கான யு19 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை குரூப் ஏ பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென் பாக். அணி பௌலிங்கை தோ்வு செய்தது.
இந்தியா 240/10: இந்திய அணி 46.1 ஓவா்களில் 240/10 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. ஆயுஷ் மட்ரே 38 ரன்கள் எடுத்த நிலையில், மற்றொரு தொடக்க பேட்டரான வைபவ் சூரியவன்ஷி 5 ரன்களுடன் நடையைக் கட்டினாா்.
ஆரோன் ஜாா்ஜ் 85: மறுமுனையில் அபாரமாக ஆடிய ஆரோன் ஜாா்ஜ் 1 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 85 ரன்களை விளாசினாா். கனிஷ்க் சௌஹான் மட்டுமே மிடில் ஆா்டரில் 46 ரன்களை எடுத்தாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினா். பாக் தரப்பில் பௌலிங்கில் முகமது சய்யம், அப்துல் சுபான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பாகிஸ்தான் 150/10 தோல்வி:
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 41.2 ஓவா்களில் 150/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக அந்த அணியில் ஹூசைபா அஸன் 2 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 70 ரன்களை விளாசினாா். கேப்டன் பா்ஹான் 23 ரன்களை எடுத்தாா்.
பௌலிங்கில் இந்திய தரப்பில் தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சௌஹான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா். பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. கனிஷ்க் ஆட்ட நாயகனாகதோ்வு பெற்றாா்.

