

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி இரண்டு டி20 ஆட்டங்களிலும் விளையாடும் இந்திய அணியில் ஆல்-ரௌண்டர் அக்சர் படேல் விளையாட மாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) நடைபெற்ற மூன்றாவது டி20 ஆட்டத்தில் குல்தீப் யாதவ் இடம்பெற்றிருந்ததால் அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தியது.
இந்த நிலையில், அக்சர் படேல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக அவர் அணியிலிருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக கடைசி இரண்டு டி20 ஆட்டங்களிலும் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியாவால் இன்று(டிச. 15) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 வயதான ஷாபாஸ் அகமது இதுவரை இரண்டு சர்வதேச டி20 ஆட்டங்களிலும் மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஸ்தக் அலி கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு திறமையை நிரூபித்ததன் விளைவாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த டி20 ஆட்டத்தில் மோசமாக தோற்ற தென்னாப்பிரிக்காவுக்கு, இந்திய அணியிலிருந்து அக்சர் படேல் விலகியிருப்பது சாதகமாக அமையுமா? என்ற கேள்விக்கான விடை இனி வரும் ஆட்டங்களில் தெரிய வரும்! இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 ஆட்டம் புதன்கிழமை(டிச. 17) லக்னௌ நகரில் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.