

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று (டிச.16) மதியம் தொடங்கியது.
ஐபில் தொடரின் 19 வது சீசன் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரின் மினி ஏலத்தில் பங்கேற்பதற்கான 369 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் மினி ஏலத்தில் பங்கேற்கும் கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், குறைந்தபட்சமாக மும்பை அணியிடம் ரூ.2.75 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளது.
அதேவேளையில், சென்னை (ரூ.43.40 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.16.40 கோடி), ஹைதராபாத் (ரூ.25.50 கோடி), குஜராத் (ரூ.12.90 கோடி), ராஜஸ்தான் (ரூ. 16.05 கோடி), தில்லி (ரூ. 21.80 கோடி), லக்னௌ (ரூ. 22.95 கோடி), பஞ்சாப் (ரூ. 11.50 கோடி) தொகையை வைத்துள்ளன.
இந்த மினி ஏலத்தின் முதல் செட்டில் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே, ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க், கேமரூன் கிரின், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் ரூ. 2 கோடி அடிப்பட்டை விலையிலும், இந்திய வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், பிரித்வி ஷா உள்ளிட்டோர் ரூ.75 லட்சம் அடிப்படை விலையிலும் இடம்பெற்றிருந்தனர்.
முதல் வீரராக ஜேக் பிரேசர் மெக்கர்க்கின் பெயர் வாசிக்கப்பட்டது. அவரை யாரும் எடுக்க முன்வராததால் அவர் விற்கப்படாமல் போனார். அடுத்து டேவிட் மில்லரின் பெயர் வாசிக்கப்பட்டது.
அவரையும் வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக தில்லி அணி நிர்வாகம் தலையிட்டதால் அவரை அடிப்படை விலையிலேயே அவரை ஏலத்தில் எடுத்தது. அவர்களைத் தொடர்ந்து இந்திய வீரர் பிரித்வி ஷாவையும் யாரும் எடுக்க முன்வரவில்லை. அவர் விற்பனை ஆகவில்லை. முன்னாள் சென்னை வீரர் டெவான் கான்வேயையும் யாரும் வாங்க முன்வரவில்லை. அதனால் அவரும் அன் சோல்ட் ஆனார்.
கடைசியாக அனைவரும் எதிர்பார்த்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனின் பெயர் வாசிக்கப்பட்டது. தொடக்கம் முதலே அவரை வாங்க மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் மல்லுக்கட்டின.
ரூ. 10 கோடியைத் தாண்டியதும் கொல்கத்தா - ராஜஸ்தான் இடையே போட்டித் தீவிரமானது. இருப்பினும், இரு அணிகளும் விட்டுக்கொடுக்கவில்லை. ரூ. 14 கோடியைத் தாண்டியதும் சென்னை அணியும் களத்தில் இறங்கியது.
கொல்கத்தாவுடன் நேரடியாக மோதியது. விலை கூடியதும் ராஜஸ்தான் அணி பின்வாங்கியது. கடைசியில் சென்னை அணி கேமரூன் கிரீனை வாங்க முன்வராததால் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
இதன்மூலம், ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு போன வெளிநாட்டு வீரர் என்ற சிறப்பையும் கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம்போனதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.