

ஆஷஸ் தொடரில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சாதனை படைத்துள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 371 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
85 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. டிராவிஸ் ஹெட் 142 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அலெக்ஸ் கேரி சாதனை
முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய அலெக்ஸ் கேரி, இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இதன் மூலம், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி ஒன்றின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்த 4-வது விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஒன்றின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்த 3-வது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் அலெக்ஸ் கேரியைச் சேரும்.
ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்த விக்கெட் கீப்பர்கள்
ஆலன் நாட் (இங்கிலாந்து, 1972) - 92 ரன்கள் & 63 ரன்கள்
இயான் ஹீலி (ஆஸ்திரேலியா, 1995) - 74 ரன்கள் & 51* ரன்கள்
பிராட் ஹேடின் (ஆஸ்திரேலியா, 2013) - 94 ரன்கள் & 53 ரன்கள்
அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா, 2025) - 106 ரன்கள் & 52* ரன்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அலெக்ஸ் கேரி, இந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 723 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.