

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது.
ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் பலர் இல்லாதபோதும், அந்த அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துள்ளது. ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து அணியை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி இழந்ததை புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருப்பதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட விரும்புவதாகவும் ஆனால், தொடர்ந்து பயிற்சியாளராக செயல்படுவது தன்னுடைய கைகளில் இல்லை எனவும் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: அடுத்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவேனா என்பது தெரியாது. அடுத்த ஆஷஸில் பயிற்சியாளராக தொடர்வது உண்மையில் என்னுடைய கைகளில் இல்லை. நான் தொடர்ந்து என்னுடைய வேலையை செய்ய முயற்சி செய்துவருகிறேன். தவறுகளிலிருந்து கிடைக்கும் பாடங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். அடுத்த ஆஷஸில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக தொடர்வேனா என்பது எனக்கான கேள்வி அல்ல என்றார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரண்டன் மெக்கல்லத்தின் பயிற்சியாளர் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை உள்ளது. இந்த கால இடைவெளியில் இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் மீண்டும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.