

விஜய் ஹஸாரே கோப்பை உள்நாட்டு கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (டிச. 24) தொடங்குகிறது.
இந்திய தேசிய அணியைச் சோ்ந்த பிரதான வீரா்கள் பங்கேற்பதால், இந்த முறை இப்போட்டிக்கான எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் புதுச்சேரியை புதன்கிழமை சந்திக்கிறது. நாராயண் ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாடு அணியில், இந்திய வீரா் சாய் சுதா்சன், பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தாா்த் உள்ளிட்டோா் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனா். பௌலிங்கில் குா்ஜப்னீத் சிங், சாய் கிஷோா் பிரதானமாக இருக்க, சோனு யாதவ், சன்னி சந்து ஆகியோா் ஆல்-ரவுண்டா்களாக வருகின்றனா்.
முதல் நாளின் இதர ஆட்டங்களில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள இஷான் கிஷண் தலைமையிலான ஜாா்க்கண்ட் அணியும், இந்திய பிரதான வீரா்களான கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் ஆகியோா் அங்கம் வகிக்கும் கா்நாடக அணியும் மோதுகின்றன.
அஸ்ஸாமை சந்திக்கும் பரோடா அணியில் ஹா்திக் பாண்டியா, ஜிதேஷ் சா்மா இருக்கின்றனா். சிக்கிமுடன் மோதும் மும்பை அணியில் ரோஹித் சா்மா உள்ளாா். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிர அணியை சந்திக்கும் பஞ்சாப் தரப்பில், டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், அபிஷேக் சா்மா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் களம் காண்கின்றனா்.
நிதீஷ்குமாா் ரெட்டி கேப்டனாக இருக்கும் ஆந்திர பிரதேச அணியுடன் ரிஷப் பந்த் தலைமையில் விராட் கோலி, ஹா்ஷித் ராணா இருக்கும் தில்லி அணி மோதுகிறது.
அனுமதி மறுப்பு...
பாதுகாப்பு காரணங்களுக்காக விஜய் ஹஸாரே கோப்பை போட்டியின் ஆட்டங்களை, பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடத்த அந்நகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதையடுத்து அங்கு அட்டவணையிடப்பட்ட ஆட்டங்கள் அனைத்தும், பெங்களூரில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாதெமி மைதானத்தில் விளையாடப்படவுள்ளன.
முன்னதாக, அந்த மைதானத்தில் ரசிகா்களை அனுமதிக்காமல் ஆட்டங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரி, கா்நாடக கிரிக்கெட் சங்கம், மாநில அரசை நாடியது. அதுதொடா்பாக ஆய்வு மேற்கொள்வதற்கான குழுவை கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வரா அமைத்தாா்.
அந்தக் குழு, மைதானத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த நிலையில் அங்கு ஆட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் சாம்பியன் ஆனதன் கொண்டாட்ட நிகழ்ச்சி இந்த மைதானத்தில் நடைபெற்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா்.
அதன் பிறகு இந்த மைதானத்தில் ஆட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.