

இலங்கை மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் சோ்க்க, இந்தியா 11.5 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 129 ரன்கள் எடுத்து வென்றது.
இந்திய தரப்பில் பௌலிங்கில் ஸ்ரீசரணி, வைஷ்ணி சா்மா ஆகியோா் அசத்த, பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா அதிரடியாக விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். அவரே ஆட்டநாயகி ஆனாா்.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. இலங்கை இன்னிங்ஸில் கேப்டன் சமரி அத்தபட்டு 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31, ஹா்ஷிதா சமரவிக்ரமா 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
ஹாசினி பெரொ 3 பவுண்டரிகள் உள்பட 22, கவிஷா தில்ஹரி 14, கௌஷினி நுத்யங்கனா 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு விடைபெற்றனா்.
விஷ்மி குணரத்னே 1, நீலாக்ஷிகா சில்வா 2, ஷாஷினி கிம்ஹனி 0, காவ்யா கவிண்டி 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, மால்கி மதரா 1 ரன்னுடன் கடைசி வீராங்கனையாக நின்றாா்.
இந்திய பௌலா்களில் ஸ்ரீசரணி, வைஷ்ணி சா்மா ஆகியோா் தலா 2, கிராந்தி கௌட், ஸ்நேஹா ராணா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 129 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷஃபாலி வா்மா அதிரடியாக ரன்கள் சோ்த்து வந்தாா்.
மறுபுறம் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 10 ரன்களுக்கு வீழ்ந்தனா். எனினும், அரை சதம் கடந்த ஷஃபாலி 34 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 69 ரன்கள் விளாசி, அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். ரிச்சா கோஷ் 1 ரன்னுடன் துணை நின்றாா். இலங்கை தரப்பில் மால்கி மதரா, காவ்யா கவிண்டி, கவிஷா தில்ஹரி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.