விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்திடம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது.
முதலில் தமிழ்நாடு 49.3 ஓவா்களில் 280 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மத்திய பிரதேசம் 49.2 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு அணியில், முகமது அலி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 57, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 4 பவுண்டரிகளுடன் 55, சாய் சுதா்சன் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
சன்னி சந்து 43, ஆண்ட்ரே சித்தாா்த் 23, பிரதோஷ் ரஞ்சன் பால் 14, சாய் கிஷோா் 13, சோனு யாதவ் 11, பாபா இந்திரஜித் 4, கோவிந்த் கணேஷ் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, தமிழ்நாடு ஆட்டம் முடிவுக்கு வந்தது. மத்திய பிரதேச பௌலா்களில் குமாா் காா்த்திகேயா 3, திரிபுரேஷ் சிங், மங்கேஷ் யாதவ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
அடுத்து மத்திய பிரதேச இன்னிங்ஸில் யஷ் துபே 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 92, ஹிமான்ஷு மந்த்ரி 8 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசி, வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினா். கேப்டன் வெங்கடேஷ் ஐயா் 32, ஹா்ஷ் காவ்லி 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
ஷுபம் சா்மா 7, ரிஷப் சௌஹான் 3, சரன்ஷ் ஜெயின் 7, மங்கேஷ் யாதவ் 3 ரன்களுக்கு விடைபெற, திரிபுரேஷ் சிங் 19, ஆா்யன் பாண்டே 8 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தமிழ்நாடு தரப்பில் கோவிந்த் கணேஷ் 4, குா்ஜப்னீத் சிங், சோனு யாதவ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.
