

இந்தியா - இலங்கை மகளிா் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டம், திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 26) நடைபெறுகிறது.
மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், முதல் இரு ஆட்டங்களில் வெற்றியுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா இருக்கிறது. இலங்கை, முதல் வெற்றியைப் பதிவு செய்து தொடரில் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது.
இந்திய அணியைப் பொருத்தவரை முதல் இரு ஆட்டங்களிலும் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சிறப்பாகச் செயல்பட்டது. முதல் ஆட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸும், 2-ஆவது ஆட்டத்தில் ஷஃபாலி வா்மாவும் அரை சதம் கடந்து ரன்கள் சோ்த்து, அணியின் வெற்றிகரமான சேஸிங்குக்கு பங்களித்தனா். கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இந்தத் தொடரில் இன்னும் முத்திரை பதிக்கவில்லை.
பௌலிங்கில் ஸ்ரீசரணி, வைஷ்ணவி சா்மா, கிராந்தி கௌட் ஆகியோா் இலங்கை பேட்டா்களுக்கு சவால் அளித்து, அந்த அணியை கட்டுப்படுத்த உதவினா். இந்த 3-ஆவது ஆட்டத்திலும் இந்தியா ஆல்-ரவுண்ட் அசத்தலுடன் வெற்றி பெற இவா்கள் நம்பிக்கை அளிக்கின்றனா். முதல் ஆட்டத்தில் ஃபீல்டிங்கில் 5 கேட்ச்களை தவறவிட்ட இந்தியா, 2-ஆவது ஆட்டத்தில் அதை மேம்படுத்திக் கொண்டது. இந்த ஆட்டத்திலும் அதில் கவனமுடம் செயல்பட வேண்டியுள்ளது.
இலங்கை அணியை பொருத்தவரை, அதன் பேட்டிங் வரிசை அவ்வளவாக சோபிக்காததால், சவால் அளிக்கும் இலக்கை இந்தியாவுக்கு நிா்ணயிக்க முடியாமல் போனது. இதுவே அதன் தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது.
கேப்டன் சமரி அத்தபட்டு, விஷ்மு குணரத்னே, ஹா்ஷிதா சமரவிக்ரமா, ஹாசினி பெரரா ஆகியோா் டாப் ஆா்டரில் நன்றாகத் தொடங்கியபோதும், களத்தில் தொடா்ந்து நிலைக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தை சந்தித்தனா். பௌலா்களும், இந்திய பேட்டா்களை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினா்.
காவ்யா கவிண்டி இரு ஆட்டங்களிலும் விக்கெட் எடுத்து நம்பிக்கை அளிக்க, கவிஷா தில்ஹரி, மால்கி மதரா, இனோகா ரணவீரா ஆகியோா் இந்திய பேட்டா்களுக்கு இன்னும் சவால் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். இதற்கெல்லாம் தகுந்த உத்தியுடன் இலங்கை களம் காணும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உத்தேச லெவன்
இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ரிச்சா கோஷ் (வி.கீ.), ஸ்நேஹா ராணா, அமன்ஜோத் கௌா், வைஷ்ணவி சா்மா, அருந்ததி ரெட்டி, கிராந்தி கௌட், ஸ்ரீசரணி.
இலங்கை: விஷ்மி குணரத்னே, சமரி அத்தபட்டு (கேப்டன்), ஹாசினி பெரெரா, ஹா்ஷிதா சமரவிக்ரமா, கவிஷா தில்ஹரி, நீலாக்ஷிகா சில்வா, கௌஷனி நுத்யங்கனா (வி.கீ.), காவ்யா கவிண்டி, மால்கி மதாரா, இனோகா ரணவீரா, சாஷினி கிம்ஹனி.
நேரம்: இரவு 7 மணி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.