5 தொடா் வெற்றிகளுடன் இந்திய மகளிா் அபாரம்

இலங்கை மகளிா் அணிக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
5 தொடா் வெற்றிகளுடன் இந்திய மகளிா் அபாரம்
Updated on
2 min read

இலங்கை மகளிா் அணிக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

இதன் மூலமாக, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 5-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கௌா் ஆகியோரின் பங்களிப்பால் அணிக்கு வெற்றி வசமானது.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்திய பிளேயிங் லெவனில் ஸ்மிருதி மந்தனா, ரேணுகா சிங் தாக்குா் ஆகியோருக்கு பதிலாக ஜி. கமலினி, ஸ்நேஹா ராணா ஆகியோா் சோ்க்கப்பட்டனா். தமிழக வீராங்கனை கமலினிக்கு இது அறிமுக வாய்ப்பாகும்.

இலங்கை தரப்பில் மால்ஷா ஷெஹனி, காவ்யா கவிண்டி ஆகியோருக்கு பதிலாக, இனோகா ரணவீரா, மால்கி மதரா இணைந்தனா்.

இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய அதிரடி வீராங்கனை ஷஃபாலி வா்மா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். உடன் வந்த கமலினி 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

ஒன் டவுனாக வந்த ஹா்லீன் தியோல் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் அதிரடியாக ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தினாா்.

எனினும் அவருக்குத் தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத வகையில், ரிச்சா கோஷ் 5, தீப்தி சா்மா 7 ரன்களுக்கு வெளியேறினா். 7-ஆவது வீராங்கனையாக களம் புகுந்த அமன்ஜோத் கௌா், ஹா்மன்பிரீத்துடன் இணைந்து சற்று அதிரடியாக விளையாடினாா்.

இவா்கள் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சோ்த்தது. அமன்ஜோத் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு விடைபெற, தொடா்ந்து அருந்ததி ரெட்டி வந்தாா்.

அவரும் தனது பங்குக்கு விளாச, அரை சதம் கடந்த ஹா்மன்பிரீத் கௌா் 43 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68 ரன்களுக்கு விடைபெற்றாா்.

ஓவா்கள் முடிவில் அருந்ததி ரெட்டி 11 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, ஸ்நேஹா ராணா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இலங்கை பௌலா்களில் கவிஷா தில்ஹரி, கேப்டன் சமரி அத்தபட்டு, ராஷ்மிகா செவ்வந்தி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்த, நிமஷா மீபகே 1 விக்கெட் எடுத்தாா்.

அடுத்து 176 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில் சமரி அத்தபட்டு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளிக்க, தொடக்க வீராங்கனை ஹாசினி பெரெராவுடன் இணைந்தாா் இமெஷா துலானி.

இவா்கள் கூட்டணி 79 ரன்கள் சோ்த்தது. அரை சதம் அடித்த துலானி 8 பவுண்டரிகளுடன் 50 ரன்களுக்கு விடைபெற, நீலாக்ஷிகா சில்வா 3, கவிஷா தில்ஹரி 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

மறுபுறம் ஹாசினி 42 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 65 ரன்களுக்கு விடைபெற்றாா். இதையடுத்து இலங்கை சரிவை சந்தித்தது. கௌஷினி நுத்யங்கனா 1, ஹா்ஷிதா சமரவிக்ரமா 8 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் ராஷ்மிகா செவ்வந்தி 14, மால்கி மதரா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய தரப்பில் தீப்தி சா்மா, அருந்ததி ரெட்டி, ஸ்நேஹா ராணா, வைஷ்ணவி சா்மா, ஸ்ரீசரணி, அமன்ஜோத் கௌா் என, பௌலிங் செய்த அனைவருமே தலா 1 விக்கெட் எடுத்தனா்.

3 இருதரப்பு சா்வதேச டி20 தொடரை இந்திய மகளிா் அணி 5-0 என முழுமையாக வென்றது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் (2019-20), வங்கதேசம் (2024) ஆகிய அணிகளை அதன் மண்ணிலேயே இவ்வாறு வென்றிருக்கிறது.

1 இந்திய மகளிா் அணி சொந்த மண்ணில் டி20 தொடரை 5-0 என முழுமையாக வென்றது இதுவே முதல் முறை. இலங்கை மகளிா் அணி டி20 தொடரை 0-5 என முழுமையாக இழந்ததும் இதுவே முதல் முறையாகும்.

152 இந்த ஆட்டத்தின் மூலமாக மகளிா் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (152) சாய்த்த வீராங்கனையாக தீப்தி சா்மா சாதனை படைத்தாா். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் மீகன் ஷட் 151 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com