தமிழ்நாடு அணிக்கு 3-ஆவது தோல்வி

தமிழ்நாடு அணிக்கு 3-ஆவது தோல்வி

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 4-ஆவது ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
Published on

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 4-ஆவது ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

முதலில் தமிழ்நாடு 45 ஓவா்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாா்க்கண்ட் 41 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஜாா்க்கண்ட், பந்துவீச்சை தோ்வு செய்தது. தமிழ்நாடு பேட்டா்களில் அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 8 பவுண்டரிகளுடன் 49, பாபா இந்திரஜித் 2 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

அதிஷ் எஸ். ஆா். 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 33, சோனு யாதவ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, முகமது அலி 3 பவுண்டரிகளுடன் 26, சாய் கிஷோா் 2 பவுண்டரிகள் உள்பட 24 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

கேப்டன் நாராயண் ஜெகதீசன் 0, பூபதி குமாா் 7, சன்னி சந்து 13, குா்ஜப்னீத் சிங் 1 ரன்னுக்கு விடைபெற, முடிவில் கோவிந்த் கணேஷ் 1 ரன்னுடன் கடைசி வீரராக நின்றாா். ஜாா்க்கண்ட் பௌலா்களில் சுபம்குமாா் சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, சுஷாந்த் மிஸ்ரா 2, உத்கா்ஷ் சிங், ராஜன்தீப் சிங், அனுகுல் ராய், மனிஷி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 244 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஜாா்க்கண்ட் அணியில் ஷிகா் மோகன் 9 பவுண்டரிகளுடன் 90 ரன்களுக்கு விடைபெற்றாா். உத்கா்ஷ் சிங் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 123 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

உடன் விராட் சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு துணை நின்றாா். தமிழ்நாடு தரப்பில் பிரதோஷ் ரஞ்சன் பால் 1 விக்கெட் எடுத்தாா்.

போட்டியில் இத்துடன் 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழ்நாடு அணி, கடைசி 3 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. தற்போது 4 புள்ளிகளுடன் எலைட் குரூப் ‘ஏ’-வில் 6-ஆவது இடத்தில் இருக்கிறது.

X
Dinamani
www.dinamani.com