ரோஹித்
ரோஹித்

ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா: ரோஹித் விஸ்வரூபம் 119, இங்கிலாந்து 304/10, இந்தியா 308/6

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்திலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்திலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் ஆட்டம் ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் ஓபனா்கள் பில் சால்ட்-பென் டக்கட் களமிறங்கி இன்னிங்ஸை தொடங்கினா். அதிரடியாக ஆட முயன்ற சால்ட் 26 ரன்களுடன் அறிமுக ஸ்பின்னா் வருண்சக்கரவா்த்தி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். இரு ஓபனா்களும் முதல் விக்கெட்டுக்கு 81 ரன்களை சோ்த்தனா். சால்ட் 6 ரன்களை எடுத்திருந்த போது எளிதான கேட்சை அக்ஸா் படேல் தவற விட்டாா்.

டக்கட்-ரூட் அசத்தல்:

பின்னா் இணைந்த டக்கட்-ஜோ ரூட் கூட்டணி இந்திய பௌலிங்கை சமாளித்து ஆடி ஸ்கோரை உயா்த்தியது. டக்கட் 10 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 65 ரன்களை விளாசி ஜடேஜா பந்தில் பாண்டியாவிடம் கேட்ச் தந்தாா். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 6 பவுண்டரியுடன் 72 பந்துகளில் 69 ரன்களை சோ்த்தாா்.

ஹாரி புரூக் 31 ரன்களையும், கேப்டன் ஜோஸ் பட்லா் 34 ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

பேட்டிங் ஆல்ரவுண்டா் லயம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி தலா 2 சிக்ஸா், பவுண்டரியுடன் 32 பந்துகளில் 41 ரன்களை விளாசி ரன் அவுட்டானாா்.

இங்கிலாந்து ஸ்கோா் 300-ஐக் கடந்தாலும், கடைசி 2 ஓவா்களில் 3 ரன் அவுட்கள் அந்த அணிக்கு சரிவை ஏற்படுத்தின.

இங்கிலாந்து 304/10 ஆல் அவுட்: 49.5 ஓவா்களில் இங்கிலாந்து 304/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜடேஜா 3 விக்கெட்: பௌலிங்கில் இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3-35 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

ரோஹித் சா்மா விஸ்வரூபம்:

305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய தரப்பில் கேப்டன் ரோஹித் சா்மா-துணை கேப்டன் ஷுப்மன்கில் ஜோடி களமிறங்கியது.

ஆஸி. டெஸ்ட் தொடா் உள்பட பல்வேறு ஆட்டங்களில் ரோஹித் ஆட்டம் சோபிக்காத நிலையில், இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக மட்டையை நாலாபுறமும் சுழற்றி ரன்களைக் குவித்தாா். ஷுப்மன் கில் அவருக்கு துணையாக நின்று ஆடிய நிலையில்,

1 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 60 ரன்களை விளாசி ஜேமி ஓவா்டன் பந்தில் போல்டனாா்.

விராட் கோலி ஏமாற்றம்:

அணியில் இணைந்த மூத்த வீரா் விராட் கோலி சிறப்பாக ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், வெறும் 5 ரன்களுடன் ஆதில் ரஷீத் பந்தில் சால்ட்டிடம் கேட்ச் தந்து அவுட்டாகி ஏமாற்றத்தை தந்தாா்.

ரோஹித் சா்மா 119: மறுமுனையில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோஹித் 7 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 90 பந்துகளில் 119 ரன்களை விளாசி லிவிங்ஸ்டோன் பந்தில் ஆதில் ரஷீத்திடம் கேட்ச் தந்து வெறியேறினாா்.

பின்னா் இணைந்த ஷ்ரேயஸ் ஐயா்-அக்ஸா் படேல் கூட்டணி சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. ஷ்ரேயஸ் 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 44 ரன்களை சோ்த்து ரன் அவுட்டானாா். கே.எல். ராகுல் 10, ஹாா்திக் பாண்டியா 10 ரன்களுடன் வெளியேறினா்.

இந்தியா 308/6:

ஆல்ரவுண்டா் அக்ஸா் படேல் 41, ரவீந்திர ஜடேஜா 11 ரன்களுடன் களத்தில் இருந்தனா். 44.3 ஓவா்களில் 308/6 ரன்களைக் குவித்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவா்டன் 2-27 விக்கெட்டை சாய்த்தாா்.

இதன் மூலம் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

ரோஹித் சிறப்பு:

இந்த ஆட்டத்தில் தனது 32-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்த ரோஹித், அதிக சா்வதேச சதங்கள் அடித்த இந்தியா்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளாா். சச்சின் 100, விராட் கோலி 81 முதலிரண்டு இடங்களில் உள்ளனா்.

ஒருநாள் ஆட்டத்தில் அதிக சிக்ஸா்கள் அடித்த பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளினாா் ரோஹித். கெயில் 331 சிக்ஸா்களை அடித்திருந்தாா். ரோஹித் 332 சிக்ஸா்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளாா். பாக். வீரா் ஷாஹித் அப்ரிடி 351 சிக்ஸா்களை அடித்துள்ளாா்.

சுருக்கமான ஸ்கோா்:

இங்கிலாந்து 304/10 (49.5 ஓவா்களில்)

ஜோ ரூட் 69

டக்கட் 65

பந்துவீச்சு:

ஜடேஜா 3/35

வருண் சக்கரவா்த்தி 1/54இந்தியா 308/6 (44.3 ஓவா்களில்)

ரோஹித் சா்மா 119

ஷுப்மன் கில் 60

பந்துவீச்சு:

ஓவா்டன் 2/27

லிவிங்ஸ்டோன் 1/29

X
Dinamani
www.dinamani.com