சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி...
தென்னாப்பிரிக்க அணியினர்...
தென்னாப்பிரிக்க அணியினர்...
Published on
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டான் மற்றும் டோனி டி ஸார்ஸி களமிறங்கினர். டோனி டி ஸார்ஸி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ரியான் ரிக்கல்டான் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்தனர். கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 76 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். தொடக்கம் முதலே சீரான இடைவெளிகளில் பவுண்டரிகள் அடித்து விளையாடிய ரியான் ரிக்கல்டால்ன் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் டெம்பா பவுமா அரைசதமும், ரியான் ரிக்கல்டான் சதமும் எடுத்து ஆட்டமிழக்க, ராஸி வாண்டர் துசென் மற்றும் அய்டன் மார்க்ரம் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

அதிரடியாக விளையாடிய ராஸி வாண்டர் துசென் 46 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய அய்டன் மார்க்ரம் 36 பந்துகளில் 52 ரன்கள் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபஸல்ஹக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா ஓமர்சாய் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பின்னர் 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 43.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகினர்.

இதனால், தென்னாப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாத்தில் அபார வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹமத் ஷா 90 ரன்களிலும், கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி ரன் ஏதுமின்றி வெளியேறி ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், லுங்கி இங்கிடி மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாளை நடைபெறும் 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com