
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ் சிறப்பாக செயல்பட்டார்.
இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட சாம் கான்ஸ்டாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் இடம்பெற்றுள்ள போதிலும், அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிராவிஸ் ஹெட்டா? சாம் கான்ஸ்டாஸா?
இலங்கைக்கு எதிரான தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அந்தத் தொடரில் சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம் எனவும், இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் விளையாடியதால் டிராவிஸ் ஹெட் அந்த இடத்தில் களமிறங்க வாய்ப்பில்லை எனக் கூற முடியாது எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய துணைக் கண்டத்தில் புதிதாக விளையாடவுள்ளவர் எப்படி விளையாடுவார் என்பது அவர் விளையாடிய பிறகே தெரியும். சாம் கான்ஸ்டாஸ் வேகமாக கற்றுக்கொள்பவர். அவர் ஆடுகளங்கள் குறித்த தகவல்களை வேகமாக உள்வாங்கிக் கொள்வார். அவர் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடியுள்ளார். உலகின் பல பகுதிகளிலும் அவர் விளையாடியுள்ளார். அதனால், அவரால் இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நன்றாக விளையாட முடியும்.
இதையும் படிக்க: ஆப்கன் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக யூனிஸ்கான் நியமனம்!
சாம் கான்ஸ்டாஸின் யுக்திகள் அவருக்கு உதவியாக இருக்கும். அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கு பொருத்தமானவராக இருப்பார். அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் திறன் கொண்ட டிராவிஸ் ஹெட்டும் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க நிறைய தெரிவுகள் இருக்கின்றன என்றார்.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடிய சாம் கான்ஸ்டாஸ், 113 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.