3-வது ஒருநாள்: நியூசி.யை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி!

இலங்கை அணி வீரர்கள்
இலங்கை அணி வீரர்கள்படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.

இலங்கை - 290/8

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 42 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குசல் மெண்டிஸ் 54 ரன்களும், ஜனித் லியாநாகே 53 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை ஆறுதல் வெற்றி

291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 81 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நாதன் ஸ்மித் 17 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது.

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ, மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் ஈஷன் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜனித் லியாநாகே ஒரு விக்கெடிட்டினைக் கைப்பற்றினார்.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த இலங்கை அணி, கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. அஷிதா ஃபெர்னாண்டோ ஆட்ட நாயகனாகவும், மாட் ஹென்றி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.