
ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. சொந்த மண்ணில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களிலும் ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஹாரி ப்ரூக் மற்றும் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் இடம்பெற்றிருந்த நிலையில், பும்ரா சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த வீரர் விருதினை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதினை விராட் கோலி வென்றிருந்தார்.
இதையும் படிக்க: பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை சமன் செய்த மே.இ.தீவுகள்!
சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதினை வென்ற ஜஸ்பிரித் பும்ரா குறித்து ஐசிசி தரப்பில் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஆண்டு முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் நீடிக்க அவர் முக்கிய பங்காற்றினார். சொந்த மண்ணில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.