சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விற்கப்படுகிறாரா என்பது குறித்து...
MS Dhoni and Sanju samson
தோனியுடன் சஞ்சு சாம்சன் (கோப்புப் படம்)
Updated on
2 min read

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வீரர்கள் சிலர் விற்கப்பட்டு, புதிய வீரர்கள் வாங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இளம் வீரர் ரியான் பராக் கேப்டனாக வழிநடத்தினார். அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் காயம் காரணமாக தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடவில்லை. அதன் பின், அவர் அணியில் இணைந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் மட்டுமின்றி, மேலும் சில வீரர்களை விற்பனை செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?

கடந்த சில நாள்களாகவே சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விற்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. அதற்கு மிக முக்கியக் காரணம், எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விக்கெட் கீப்பர் ஒருவர் தேவை என்பதே.

சிஎஸ்கேவின் விக்கெட் கீப்பரான மகேந்திர சிங் தோனி இன்னும் சில நாள்களில் அவரது 44-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அவர் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியால் வாங்கப்படவுள்ளார் என்ற தகவல் வேகமாகப் பரவியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமின்றி, சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் போட்டியில் உள்ளது. அதற்கு காரணம் அந்த அணியின் விக்கெட் கீப்பர்களான குயிண்டன் டி காக் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் இருவரும் ஐபிஎல் சீசன் முழுவதும் கொல்கத்தா அணிக்காக விளையாடுவார்களா என்பதே ஆகும். அதனால், சஞ்சு சாம்சனை வாங்கும் எண்ணத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இருப்பதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல் அணி நிர்வாகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல்வேறு அணிகளும் எங்களது அணியில் உள்ள 6 வீரர்களை வாங்குவதற்காக எங்களை அணுகுகிறார்கள். அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்ற அணிகளின் வீரர்களை வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட அணிகளை அணுகுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுடன் இணையும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that some players in the Rajasthan Royals team will be sold and new players will be bought for next year's IPL series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com