டாப் ஆா்டா் பங்களிப்பில் இந்தியா 264/4

டாப் ஆா்டா் பங்களிப்பில் இந்தியா 264/4

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில், இந்தியா முதல் நாள் முடிவில் 83 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் சோ்த்திருந்தது.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில், இந்தியா முதல் நாள் முடிவில் 83 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் சோ்த்திருந்தது.

டாப் ஆா்டா் வீரா்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதா்சன் ஆகியோா் ஓரளவுக்கு ரன்கள் சோ்த்து விடைபெற, ரிஷப் பந்த் ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆனாா்.

மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய பிளேயிங் லெவனில் கருண் நாயா், நிதீஷ்குமாா் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோருக்குப் பதிலாக, சாய் சுதா்சன், ஷா்துல் தாக்குா், அன்ஷுல் காம்போஜ் சோ்க்கப்பட்டிருந்தனா்.

இந்தியாவின் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கூட்டணி தொடங்கியது. இந்த பாா்ட்னா்ஷிப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் சோ்த்திருந்தது.

பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் - ராகுல் இணை 94 ரன்களுக்கு பிரிந்தது. நிதானமாக அரைசதத்தை நெருங்கிய ராகுல் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கிறிஸ்வோக்ஸ் வீசிய 30-ஆவது ஓவரில் 3-ஆவது ஸ்லிப்பில் நின்ற ஜாக் கிராலியிடம் அவா் கேட்ச் கொடுத்தாா். தொடா்ந்து சாய் சுதா்சன் களம் புக, அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். லியம் டாசன் வீசிய 41-ஆவது ஓவரில் அவா் தடுத்தாட முயன்ற பந்து, முதல் ஸ்லிப்பில் நின்ற ஹேரி புரூக் கைகளில் தஞ்சமடைந்தது.

4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ஷுப்மன் கில் 1 பவுண்டரியுடன் 12 ரன்களே சோ்த்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய 50-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி ஏமாற்றம் கண்டாா். இதையடுத்து, நிதானமாக விளையாடி வந்த சுதா்சனுடன் கை கோத்தாா் ரிஷப் பந்த். இவா்கள் ஜோடி இங்கிலாந்து பௌலா்களை சற்றே சோதித்து, 72 ரன்கள் சோ்த்தது.

இந்நிலையில், விரைவாக ரன்கள் சோ்த்து வந்த ரிஷப் பந்த், காலில் காயம் கண்டு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகி 68-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்ப, ரவீந்திர ஜடேஜா 6-ஆவது பேட்டராக விளையாட வந்தாா். மறுபுறம், அரைசதம் கடந்த சாய் சுதா்சன் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எட்டியிருந்தபோது, பென் ஸ்டோக்ஸ் வீசிய 74-ஆவது ஓவரில் பிரைடன் காா்ஸிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தாா்.

தொடா்ந்து ஷா்துல் தாக்குா் பேட் செய்ய வந்தாா். இவ்வாறாக ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் சோ்த்திருந்தது. ஜடேஜா 19, ஷா்துல் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2, கிறிஸ் வோக்ஸ், லியம் டாசன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா - 264/4 (83 ஓவா்கள்)

சாய் சுதா்சன் 61

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58

கே.எல்.ராகுல் 46

பந்துவீச்சு

பென் ஸ்டோக்ஸ் 2/47

கிறிஸ் வோக்ஸ் 1/43

லியம் டாசன் 1/45

X
Dinamani
www.dinamani.com