
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 11) லார்ட்ஸ் திடலில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ஸ்டீவ் ஸ்மித் சாதனை
முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா 20 பந்துகளில் 0 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார். கேமரூன் கிரீன் 4 ரன்கள், மார்னஸ் லபுஷேன் 17 ரன்கள் மற்றும் டிராவிஸ் ஹெட் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித்துடன் பியூ வெப்ஸ்டர் ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி, அரைசதம் கடந்து அசத்தினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அரைசதம் எடுத்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் அதிக அரைசதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் அதிக அரைசதங்கள் (17 அரைசதங்கள்) அடித்துள்ள ஆலன் பார்டரின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் ஸ்டீவ் ஸ்மித்தின் 18-வது அரைசதம் இதுவாகும்.
டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் அதிக அரைசதம் அடித்த வெளிநாட்டு வீரர்கள்
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 18 அரைசதங்கள்
ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) - 17 அரைசதங்கள்
சர் விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 17 அரைசதங்கள்
சர் டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) - 14 அரைசதங்கள்
சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) - 14 அரைசதங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.