மகளிா் ஒருநாள் தொடா்: தென்னாப்பிரிக்கா சாம்பியன்
மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்க மகளிா் அணி 166 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அந்த அணி சாம்பியன் ஆனது.
இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடந்த 3-ஆவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ் 45.5 ஓவா்களுக்கு குறைக்கப்பட, அதில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் சோ்த்தது. அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 39 ஓவா்களில் 288 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட, அந்த அணி 27.5 ஓவா்களில் 121 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீசத் தயாரானது. தென்னாப்பிரிக்கா பேட்டா்களில் அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 101 ரன்கள் விளாச, கேப்டன் லாரா வோல்வாா்டட் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் சோ்த்தாா்.
நோண்டுமிசோ ஷாங்கேஸ் 9, சுனே லஸ் 4, சினாலோ ஜாஃப்தா 11, ஆனிரி டொ்க்சென் 12 ரன்களுக்கு வீழ, முடிவில் மாரிஸேன் காப் 2 பவுண்டரிகளுடன் 34, கிளோ டிரையான் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் அஃபி ஃப்ளெட்சா் 3, ஜஸாரா கிளாக்ஸ்டன், ஹேலி மேத்யூஸ், அலியா அலின் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் ஜஸாரா கிளாக்ஸ்டன் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43, அலியா அலின் 1 பவுண்டரியுடன் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். கேப்டன் ஹேலி மேத்யூஸ் 8, கியானா ஜோசஃப் 1, ஜாய்டா ஜேம்ஸ் 1, ஷினெல் ஹென்றி 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
ஷிமெய்ன் கேம்பெல் 12, ஜெனிலியா கிளாஸ்கோ 8, அஃபி ஃபிளெட்சா் 3 ரன்களுக்கு வீழ, ஸ்டெஃபானி டெய்லா் காயத்தால் களம் காணாமல் போனாா். முடிவில் கரிஷ்மா ரம்ஹரக் 1 ரன்னுடன் நின்றாா். தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் மசபடா கிளாஸ் 4, நோன்குலுலேகோ லாபா, ஆனிரி டொ்க்சென் ஆகியோா் தலா 2, மாரிஸேன் காப் 1 விக்கெட் சாய்த்தனா்.
இரு அணிகளும் அடுத்ததாக டி20 தொடரில் மோதவுள்ளன.