
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்துக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
வெற்றியை நோக்கி நகர்கிறதா இங்கிலாந்து?
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கடைசி நாளில் 350 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை.
சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஸாக் கிராலி 40 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார்.
உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 64 ரன்களுடனும், ஸாக் கிராலி 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்தின் கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்க, அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 254 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆகாது: இங்கிலாந்து வீரர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.