சாய் கிஷோா், நடராஜன் அசத்தல்; திருப்பூருக்கு 5-ஆவது வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 27-ஆவது ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
இரு அணிகளுக்குமே இது 7-ஆவது ஆட்டமாக இருக்க, திருப்பூா் 5-ஆவது வெற்றியையும், நெல்லை 5-ஆவது தோல்வியையும் பதிவு செய்துள்ளன.
இந்த ஆட்டத்தில் முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சோ்க்க, நெல்லை 19.4 ஓவா்களில் 113 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. திருப்பூா் தரப்பில் பேட்டிங்கில் கேப்டன் சாய் கிஷோரும், பௌலிங்கில் நடராஜனும் சிறப்பாகச் செயல்பட்டனா்.
முன்னதாக டாஸ் வென்ற நெல்லை, பந்துவீச்சை தோ்வு செய்தது. திருப்பூா் பேட்டிங்கில் அமித் சாத்விக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 41, துஷாா் ரஹேஜா 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் அடித்தனா். கேப்டன் சாய் கிஷோா் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
முகமது அலி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, பிரதோஷ் ரஞ்சன் பால் 4 ரன்களுக்கு விடைபெற, ஓவா்கள் முடிவில் அனோவன்கா் 3, உத்திரசாமி சசிதேவ் 2 சிக்ஸா்களுடன் 13 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். நெல்லை பௌலிங்கில் சோனு யாதவ் 3, ராக்கி பாஸ்கா், அஜய் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 183 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நெல்லை பேட்டா்களில், ரித்திக் ஈஸ்வரன் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 39, குருசாமி அஜிதேஷ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 28 ரன்கள் அடித்தனா். அதிஷ் 3 பவுண்டரிகளுடன் 17, சோனு யாதவ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
சந்தோஷ் குமாா் 0, ஹரீஷ் 0, கேப்டன் அருண் காா்த்திக் 2, முகமது அட்னன் கான் 1, அஜய் கிருஷ்ணா 0, சச்சின் ராட்டி 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நெல்லை ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இமானுவல் செரியன் 2 ரன்களுடன் கடைசி வீரராக நிற்க, திருப்பூா் பந்துவீச்சாளா்களில் டி.நடராஜன் 3, மோகன் பிரசாத் 2, சாய் கிஷோா், இசக்கிமுத்து, முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.