
இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் ஆக்ரோஷத்துடன் களம் காணுவார் என்று ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) களம் காணுகின்றன.
ஐசிசி போட்டிகளில் கடைசியாக நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது என்றால், அது 2011 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் காலிறுதியில் தான். அதன் பிறகு, 2015 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதி, 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இறுதி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆகியவற்றில் அந்த அணியிடம் இந்தியா தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு சிம்மசொப்பனாக விளங்குவார் என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.
அரையிறுதி ஆட்டத்துக்கு முன் செய்தியாளர்களுடன் ஸ்மித் பேசியதாவது : ”இது போன்ற பெரிய போட்டிகளில் வீரர்களுக்கு அழுத்தம் எப்போதும் இருக்கும். ஆனால், டிராவிஸ் ஹெட் இது போன்ற போட்டிகளில் இதற்கு முன்பாக சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கியுள்ளதைப் பார்த்திருக்கிறோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராகவும் டிராவிஸ் ஹெட் துபையில் ஆக்ரோஷமாக விளையாட முனைப்புடன் இருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். பவர்-பிளே ஓவர்களில் அவர் ரன்கள் சேர்க்க தொடங்கிவிட்டாலே போதும்” என்றார்.
இந்தியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்..
31 வயதான இடது கை பேட்ஸ்மேன் டிராவிஸ் மைக்கேல் ஹெட் இந்திய அணிக்கு எதிராக 9 ஒருநாள் போட்டிகளில் களம் கண்டு, மொத்தம் 345 ரன்களைக் குவித்துள்ளார்.
அவரது சராசரி ரன் ரேட் விகிதம் 43.12. அதில் ஒரு சதம் அடங்கும். கடந்த 2023-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக 120 பந்துகளில் 137 ரன்கள் திரட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்திய அணி இன்றைய அரையிறுதிப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மென்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.