
துபை, பாகிஸ்தான் என மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருப்பதாக நியூசி. தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பாரெனவும் கூறியுள்ளார்.
இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.9) சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடுவதால் கூடுதல் ஆதாயாம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நியூசி. பயிற்சியாளர் கூறியதாவது:
வருண் சக்கரவர்த்தி அச்சுறுத்தல்
வருண் சக்கரவர்த்தி தரமான பந்துவீச்சாளர். எங்களுக்கு எதிராக அவர் கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அதனால், அவருக்கு எதிராக எப்படி ரன்களை குவிப்பது என எங்களது குழுவினர் தீவிரமாக சிந்தித்து வருகிறார்கள்.
சிலநாள்களுக்கு முன்பாக இந்தியாவுடன் விளையாடிய போட்டியில் இருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
துபையில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமென நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் இங்கு விளையாடுவது என்பது எங்களது கைகளில் இல்லை. அது ஐசிசியின் முடிவு. அதனால், அதுகுறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை.
நாங்கள் ஒருபோட்டி துபையில் விளையாடியுள்ளதால் அதிலிருந்து அனுபவங்களை விரைவாக கற்றுக்கொண்டு இருக்கிறோம்.
மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது
8 அணியிலிருந்து 2 அணியாக வந்துள்ளோம். எங்களது இடத்திலிருந்து பார்த்தால் இது ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. மீதமிருப்பது ஒரு போட்டிதான். ஞாயிறு இந்தியாவை வீழ்த்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
பாகிஸ்தான், துபை என மாறிமாறி சுற்றுவது பரப்பான வேலையில் சற்று தொல்லையாக இருக்கிறது. ஆனாலும் இதை சமாளிக்கும் வகையில் நியூசிலாந்து அணி தயாராக இருக்கிறது.
லாகூரிலிருந்து துபைக்கு வருவதற்கே ஒருநாள் சரியாக போய்விட்டது. ஆனால், சில நாள்கள் மீதமுள்ளன. அதில் ஓய்வெடுக்கவும் பயிற்சி செய்யவும் சரியாக இருக்கும்.
அதிகமாக பயிற்சி செய்வதைவிட மனதுக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.